சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் ஒரே நாளில் சிறையிலிருந்து விடுதலை? வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  இருக்கும் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் வரும் 27ம் தேதி ஒரே  நாளில் விடுதலையாவார்கள் என்று சிறை வட்டாரம் மூலம் தெரியவருகிறது. ஜெயலலிதா  மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரணை நடத்திய பெங்களூரு தனிநீதிமன்றம்  கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா  உள்பட நான்கு பேரையும் குற்றவாளியாக உறுதி செய்தது. மேலும் நான்கு  பேருக்கும் தலா நான்காண்டுகள் சிறை தண்டனையும் முதல் குற்றவாளியான  ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற மூன்று பேருக்கு தலா ரூ.10 கோடியே 10  ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டப்பட்டது.  உச்ச நீதிமன்றம் 2017-ம்  ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி  தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து  உத்தரவிட்டது. அதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி  வழக்கில் 2வது குற்றவாளியான சசிகலா, 3வது குற்றவாளியான சுதாகரன், 4வது  குற்றவாளியான இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டனர். கடந்த 47 மாதங்களாக சிறையில் உள்ள குற்றவாளிகளின் தண்டனை  காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது.

இந்நிலையில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10  கோடியே 10 ஆயிரம் அபராத தொகைக்கான வங்கி வரையோலை (டிடியை) பெங்களூரு தனி  நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி வக்கீல்  சி.முத்துகுமார் செலுத்தினார்.

அதை தொடர்ந்து மற்றொரு குற்றவாளியான  இளவரசிக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான டிடியை  வக்கீல்கள் அசோகன், பி.முத்துகுமார் ஆகியோர் கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி  நீதிமன்றத்தில் செலுத்தினர். அதை தொடர்ந்து இதே வழக்கில் சிறையில் உள்ள  சுதாகரன் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ளதால், அவரை விடுதலை  செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை நடத்திய தனி நீதிமன்றம்,  குற்றவாளி செலுத்த வேண்டிய அபராத தொகை செலுத்தினால் விடுதலை செய்யும்படி  சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

சுதாகரனை விடுதலை செய்ய நீதிமன்றம்  அனுமதி வழங்கி ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில் இன்னும் அவர் செலுத்த  ேவண்டிய ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான அபராத தொகை செலுத்தப்படாமல் உள்ளது.  இவ்வார இறுதிக்குள் முறைப்படி அபராத தொகையை செலுத்த சுதாகரன் தரப்பு  தயாராகி வருவதாகவும், சசிகலா , இளவரசி ஆகியோர் சிறையில் இருக்கும்போது,  சுதாகரன் மட்டும் முன்கூட்டியே விடுதலையாவது மற்ற இருவரின் மன நலத்தை  பாதிக்கும் என்பதால், மூன்று பேரும் வரும் 27ம் தேதி ஒரே நாளில் விடுதலையாக  தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.இந்நிலையில் சசிகலா விடுதலைக்கு  இன்னும் 8 நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதால், விடுதலையாகும் அவருக்கு  சிறப்பான வரவேற்பு கொடுக்க தமிழக மற்றும் கர்நாடக மாநில அமமுக நிர்வாகிகள்  முடிவு செய்துள்ளனர். கோலார் மாவட்ட அமமுக செயலாளர் சகாயராஜ்  தலைமையில் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பரப்பன அக்ரஹாரா சிறை தொடங்கி  கர்நாடக-தமிழக எல்லையான ஓசூர் வரை வரவேற்பு பேனர்கள் வைக்க முடிவு  செய்துள்ளனர்.

 சசிகலா உள்பட மூன்று பேரையும்  வரும் 27ம் தேதி மாலை 6 மணிக்கும் சிறை நிர்வாகம் விடுதலை செய்தாலும்  சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு 9.30 மணிக்கு மேல் சிறை  வளாகத்தில் இருந்து அனுப்பி வைக்க மாநகர போலீஸ் கமிஷனர் முடிவு  செய்துள்ளார். இரவில் சசிகலா விடுதலை செய்யப்படுவதால், அவரை காரில் சென்னை  அழைத்து செல்லாமல், சூளகிரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இரவு தங்கி ஓய்வெடுக்க செய்தபின், அதிகாலையில் சென்னை அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரியவருகிறது.

Related Stories: