இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கி. வெற்றி

காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 14ம் தேதி காலே மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்டில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 135 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 421 ரன் குவித்தது.  கேப்டன் ஜோ ரூட் 223 ரன், லாரன்ஸ் 73, பேர்ஸ்டோ 47 ரன் எடுத்தனர். 286 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய  இலங்கை, 359 ரன் குவித்து ஆல் அவுட்டானது. திரிமன்னே 111, ஏஞ்சலோ மேத்யூஸ் 71, குசால் பெரேரா 62 ரன் விளாசினர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஜாக் லீச் 5, டாம் பெஸ் 3,  சாம் கரண் 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 74 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ 11, டான் லாரன்ஸ் 7 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 25வது ஓவரில் 76 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பேர்ஸ்டோ 35 ரன், லாரன்ஸ் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார்.இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் போட்டி இதே காலே அரங்கில்  ஜன.22ம் தேதி தொடங்குகிறது.

Related Stories:

>