சிராஜ், தாகூர் வேகத்தில் சரிந்தது ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: இன்று கடைசி நாள் விறுவிறு...

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 328 ரன் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. பிரிஸ்பேனில் நடக்கும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன் குவித்த நிலையில், இந்தியா 336 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, 33ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா, 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்தது. ஹாரிஸ் 1, வார்னர் 20 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.  பொறுப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்து மிரட்டியது. நடராஜன் பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசிய ஹாரிஸ் 38 ரன் எடுத்து தாகூர் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் 48 ரன் எடுத்து வாஷிங்டன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். சிராஜின் அனல் பறந்த வேகப் பந்துவீச்சில் லாபுஷேன் 25, மேத்யூ வேடு (0), ஸ்மித் 55 ரன் (74 பந்து, 7 பவுண்டரி) ஆகியோர் பெவிலியன் திரும்பினர்.

ஆஸி. 5விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்து திணறிய நிலையில், ஓரளவு தாக்குப்பிடித்த கேமரான் கிரீன் 37 ரன், கேப்டன் டிம் பெய்ன் 27 ரன் எடுத்தனர். அடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க் 1, நாதன் லயன் 13, ஜோஷ் ஹேசல்வுட் 9 ரன்னில் அணிவகுக்க, ஆஸ்திரேலியா 294 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்தது (75.5 ஓவர்). பேட் கம்மின்ஸ் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் அமர்க்களமாகப் பந்துவீசிய முகமது சிராஜ் 5, ஷர்துல் தாகூர் 4 விக்கெட் அள்ளினர். வாஷங்டன் 1 விக்கெட் எடுத்தார். நடராஜன் விக்கெட் எடுக்காவிட்டாலும், துல்லியமாகப் பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, 328 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. 2வது ஓவரை ஹேசல்வுட் வீசிக் கொண்டிருந்த நிலையில் மழையால் 4ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா 1.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 4, ஷுப்மன் கில் (0) களத்தில் உள்ளனர். கை வசம் 10 விக்கெட் இருக்க இன்னும் 324 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்தியா இன்று பரபரப்பான கடைசி நாள் சவாலை எதிர்கொள்கிறது.

அதிக கேட்ச்: ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்கள் வரிசையில் ரோகித் இடம் பிடித்துள்ளார். பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 3 கேட்ச், 2வது இன்னிங்சில் 2 கேட்ச் என மொத்தம் 5 கேட்ச் பிடித்த அவர், ஏக்நாத் சோல்கர் (சென்னை,1969/70), கே.ஸ்ரீகாந்த் (பெர்த் 1991/92), டிராவிட் (சென்னை, 1997/98) ஆகியோருடன் இணைந்துள்ளார்.

3வது முறையாக 20 விக்கெட்

கடந்த 32 ஆண்டுகளில் பிரிஸ்பேனில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில், ஆஸி. அணி 3வது முறையாக 20 விக்கெட்டையும் இழந்துள்ளது. முன்னதாக 1992-93ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும், 2008-09ல் நியூசிலாந்துக்கு எதிராகவும் இப்படி 2 இன்னிங்சிலும் ஆல் அவுட்டாகி உள்ளது.

அசத்தும்  இளம்புயல்கள்

நடப்பு தொடரின் 8 இன்னிங்சிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டுள்ளனர். ஒரு இன்னிங்சில் கூட ஆஸி. 400 ரன்னை தொடவில்லை. அஷ்வின், ஷமி, பூம்ரா, உமேஷ், ஜடேஜா காயம் காரணமாக விலகிய நிலையிலும், அனுபவம் இல்லாத சிராஜ், சைனி, நடராஜன், வாஷிங்டன் ஆகியோர் புயலென புறப்பட்டு ஆஸி. அணியை சிதைத்துள்ளனர்.

Related Stories:

>