செங்கல்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சென்னை பள்ளி மாணவிகள் இருவர் உட்பட 3 பேர் பரிதாப பலி

சென்னை: சென்னையை சேர்ந்த பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் செங்கல்பட்டு அருகே கல் குவாரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை மொட்டைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி தில்ஷத் (40). இவர்களது மகள் யாஸ்மின் பரிதா (17). சென்னை எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் தேவிபிரசாத். இவரது மகள் சம்யுக்தா (17). தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார் மகள் ஏஞ்சல் (17). நெருங்கிய தோழிகளான மூன்று பேரும் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தனர்.இந்நிலையில், பள்ளி விடுமுறை காரணமாக, இவர்கள் நேற்று  யாஸ்மின் பரிதாவின் தாய் தில்ஷாத், அவரது மாமா தமிம் அன்சாரி (25) ஆகியோருடன் வாடகை காரை எடுத்துக்கொண்டு செங்கல்பட்டு அருகே உள்ள காந்தலூர் வந்தனர்.

அங்குள்ள தனியார் கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் 3 மாணவிகள் உள்பட 5 பேரும் குளித்துள்ளனர். சிறிது நேரத்தில், குவாரியில் தேங்கிய நீரில், மாணவிகள் சம்யுக்தா மற்றும் ஏஞ்சல் ஆகியோர்  மூழ்கி உயிருக்கு போராடினர்.இதை பார்த்த தமிம் அன்சாரி அவர்களை காப்பாற்ற குவாரியில் இறங்கினார். நீச்சல் தெரியாத காரணத்தால், அவரும் நீரில் மூழ்கினார். இதை கண்ட பரிதா மற்றும் தில்ஷாத் ஆகியோர் கரைக்கு வந்து கூச்சலிட்டனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மூவரும் தண்ணீரில் மூழ்கி சடலமாக மிதந்தனர். இச்சம்பவம் குறித்து, தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று 3 சடலங்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories: