இனி அதிகாலையில் விலை நிர்ணயம்; நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்வு: என்இசிசி அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இனி அதிகாலையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என என்இசிசி அறிவித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைக்கு என்இசிசி வாரம் 3 முறை விலை நிர்ணயம் செய்கிறது. கடந்த ஒரு வாரமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 420 காசாக இருந்து வந்தது. ஆனாலும் கோழிப்பண்ணைகளில் வியாபாரிகள் 350 காசுக்கு முட்டையை கொள்முதல் செய்து வந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி முட்டை விற்பனை தமிழகம் முழுவதும் டல் அடித்ததால், என்இசிசி நிர்ணயம் செய்த விலையில் இருந்து 70 காசுகள் வரை வியாபாரிகள் குறைத்து வாங்கி வந்தனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்ததை தொடர்ந்து, என்இசிசி இன்று முட்டை விலையில் 5 காசுகள் உயர்த்தி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை 425 காசுகள் என நிர்ணயம் செய்துள்ளது. வழக்கமாக காலை 8 மணிக்கு முட்டை விலை குறித்த அறிவிப்பு வாட்ஸ் அப் மூலம் என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜின் அறிவுரைப்படி, என்இசிசி மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியம் பண்ணையாளர்களுக்கு அனுப்பி வைப்பார். ஆனால் இன்று அதிகாலை 5 மணிக்கே முட்டை விலை 5 காசுகள் உயர்த்தி அறிவிப்பு வெளியானது. பண்ணைகளில் வியாபாரிகள் முட்டை வாங்க காலை 7 மணிக்குள் சென்று விடுவார்கள்.

அதற்கு முன் விலை அறிவிக்கப்பட்டால், வசதியாக இருக்கும் என பண்ணையாளர்கள் என்இசிசியிடம் கோரிக்கை வைத்தனர். அதையேற்று, என்இசிசி முட்டை விலையை அதிகாலையே இன்று முதல் அறிவிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளதாக மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், `என்இசிசி முட்டை விலையை அறிவித்தாலும், வியாபாரிகள் ஒரு விலையை அறிவிப்பார்கள். அந்த விலைக்கு தான் பண்ணைகளில் முட்டையை எடுத்து செல்வார்கள். என்இசிசி, கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், முட்டை வியாபாரிகள் சங்கம் ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து ஒரே விலையை அறிவிப்பது என சில மாதங்களுக்கு முன் முடிவு எடுத்தனர்.

ஆனால் அது ஒரே மாதத்தில் காலாவதியாகிவிட்டது. இப்போது என்இசிசி அதிகாலை 5 மணிக்கே முட்டை விலையை அறிவித்து பண்ணையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு முன் வாரம் தோறும் 3 நாட்கள் பண்ணையாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. தொழில்நுட்பம் வளர, வாட்ஸ் அப்பில் குரூப் தொடங்கப்பட்டு அதில் பண்ணையாளர்களிடம் முட்டை விலை தொடர்பான கருத்து கேட்கப்பட்டு இறுதியாக என்இசிசி சேர்மன் முட்டை விலையை அறிவிப்பார். தற்போது அந்த நிலையும் மாறி, ஆப்மூலம் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது` என்றனர்.

Related Stories:

>