ஏழை மாணவர்களின் நலன்கருதி அணுமின்நிலைய தொழில்நுட்ப தேர்வு தமிழகத்தில் நடத்தவேண்டும்: ராமதாஸ்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை; தமிழ்நாட்டின் கல்பாக்கம், மராட்டியத்தின் தாராப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் பொறியியல் பட்டயப்படிப்பு படித்தவர்களில் 50 பேருக்கும் 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்களில் 110 பேருக்கும் மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியிடங்களுக்கான போட்டி தேர்வுகள் அனைத்தும் மும்பையில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தை சேர்ந்த ஏழை மாணவர்கள் போட்டி தேர்வை எழுத ஒரு முறையும் நேர்காணலுக்கு மறுமுறையும் தலா 1,700 கி.மீ தொலைவுக்கு பயணம் செய்து, குறைந்தது இரு நாட்கள் மும்பையில் தங்கியிருந்து திரும்புவது என்பது பொருளாதார அடிப்படையில் சாத்தியமல்ல. மும்பை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைசேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பணிகளைக் கைப்பற்றுவதற்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்தப் பணிகள் கிடைக்காமல் போவதற்கும் இந்த விதிமுறைகள் வழிவகுத்து விடும். இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது 5 இடங்களிலாவது தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவிருப்பவர்கள் அனைவரும் தொழில்நுட்பப் பணியாளர்கள் தான் என்பதால், அந்தப் பணியிடங்கள்அனைத்தையும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்களை கொண்டு நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: