விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பியதால் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகனங்களில் மக்கள் தவிப்பு

மதுராந்தகம்: பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் திரும்பியதால் டோல்கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்றனர். இவர்கள் பஸ், ரயில் மற்றும் கார்களில் பயணம் செய்தனர். இந்த நிலையில், பொங்கல் முடிந்ததும் அனைவரும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகமான மக்கள் சென்னைக்கு கிளம்பி வந்தனர். இதன்காரணமாக சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

குறிப்பாக, மதுராந்தகம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் குறுக்கு சாலையினை கடக்கும் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவித்தனர்.

படாளம், புக்கத்துறை மற்றும் மாமண்டூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டபோதும்  நெரிசல் காணப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு சுமார் 10 கி.மீ. வேகத்திலேயே வாகனங்கள் சென்றன. இதனால் வாகனங்களில் பயணம் செய்த முதியவர்கள், சிறுவர்கள் உள்பட பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்

பொங்கல் பண்டிகைக்கு சென்றவர்கள், பஸ், கார்கள் மூலம் நேற்றிரவு முதல் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஏராளமானோர் வாகனங்களில் திரும்பி வருவதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் செங்கல்பட்டில் இருந்து சென்னை செல்வதற்கு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலானது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

Related Stories: