பகார்டி: 150 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் மதுபான நிறுவனம்!

நன்றி குங்குமம்

Family Tree

உலகின் மிகப்பெரிய தனியார் ஸ்பிரிட்ஸ் (மதுபானம்) நிறுவனம்; இந்தத் துறையில் 150 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் ஒரே குடும்ப நிறுவனம்; வருடத்துக்கு 2 கோடிக்கும் அதிகமான ரம் பெட்டிகள் (கேஸ்) விற்பனை; ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை அனைத்து பட்டி தொட்டிகளிலும் இதன் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள்... என்று ‘பகார்டி’யைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

சுற்றுலா, கலை நிகழ்ச்சிகள், உரையாடல், விவாதம், பழைய நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டங்கள், பண்டிகைகள் போன்ற நிகழ்வுகளின்போது மனிதர்களை ஒன்றிணைக்கும் சங்கிலியாக இருக்கும் மதுபானங் களைத் தயாரிப்பதே ‘பகார்டி’யின் முக்கிய நோக்கம். கணக்கில்லாத சூறாவளி, ஐந்து முறை நிகழ்ந்த கடுமையான பூகம்பம், தீ விபத்து என பல சோதனைகளைத் தாண்டி 150 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்பது இதன் சாதனை.

*டான் ஃபகுண்டோ பகார்டி

‘ரம்மின் தேவாலயம்’ என்று புகழப்படும் ‘பகார்டி’யின் மது சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் டான் ஃபகுண்டோ பகார்டி.நெருக்கடியான சூழலில் ஸ்பெயின் தத்தளித்துக் கொண்டிருந்த காலம். பெரிதாக வேலை வாய்ப்புகள் எதுவும் அங்கே உருவாகவில்லை.

இப்படியான ஒரு காலகட்டத்தில் 1814ம் வருடம் பார்சிலோனா மாகாணத்தில் உள்ள சிட்ஜஸ் என்ற டவுனில் பிறந்தார் பகார்டி. இவரது தந்தை கொத்தனார். பகார்டியின் சகோதரர்கள் பிழைப்பைத் தேடி கியூபா செல்லவேண்டிய நிலை. உடன்பிறப்புகளைப் பின்தொடர்ந்து பகார்டியும் கியூபா சென்றபோது அவரது வயது 16.

கியூபாவின் பெரிய நகரங்களில் ஒன்றான சாண்டியாகோவில் உள்ள சகோதரரின் ஜெனரல் ஸ்டோரில் அவருக்கு வேலை. அதிக நேரம் வேலை பார்த்தும், செலவைக் குறைத்தும் 1844ல் சொந்தமாக ஒரு கடையை ஆரம்பித்தார் பகார்டி. கடை திறப்பதற்கு முன் வசதியான வீட்டுப் பெண்ணான அமலியாவை அவர் திருமணம் செய்ததுதான் திருப்புமுனை.

ஆம்; பகார்டியின் பிசினஸுக்கு உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் முதலீடும் செய்தார் அமலியா. பகார்டிக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர் ஆரம்பித்த கடையும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது. ஆனால், 1852ல் காலரா தொற்றும் பூகம்பமும் சாண்டியாகோவைப் புரட்டி எடுத்துவிட்டது. உயிரைத் தற்காத்துக் கொள்ள குடும்பத்துடன் சில மாதங்கள் சொந்த ஊருக்கே போய்விட்டார் பகார்டி.

நிலைமை சரியான பிறகு சாண்டியாகோவிற்குத் திரும்பினால், அங்கே அவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கடை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சாண்டியாகோவில் எந்த பிசினஸும் இல்லை. கடனுக்கு மேல் கடன். திவாலானார் பகார்டி. இன்னொரு பக்கம் ரம் என்ற மதுபானம் மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருந்தது. பூகம்பம், காலராவின் பாதிப்பிலிருந்து ஓர் ஆசுவாசத்தை ரம் கொடுத்ததால் மக்கள் அதை விரும்பிப்பருகினர்.

அதிகளவு ஆல்கஹாலுடன் சுத்திகரிப்பு செய்யப்படாமல் ரம் இருந்ததைக் கண்டார் பகார்டி. கைவசம் எந்த தொழிலும் இல்லாத அவருக்கு இது ஒரு தொடக்கத்தைக் கொடுத்தது.நல்ல, தரமான ரம்மைத் தயாரித்தால் கூட்டம் அள்ளும் என்று திட்டமிட்ட பகார்டி, உடனே ரம் தயாரிக்கும் பரிசோதனையில் இறங்கிவிட்டார். அவருக்கு கியூபாவில் வாழ்ந்த பிரெஞ்சுக்காரரான ஜோஸ் பவுட்டிலியர் என்பவர் உதவி செய்தார். இருவரும் சேர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பரிசோதனை செய்து, காய்ச்சி வடிகட்டும் முறையில் ஒயிட் ரம்மை உருவாக்கினர்.

இதுதான் உலகின் முதல் மிருதுவான, ஆல்கஹால் குறைவான ரம். சிறப்பான தரம், குறைந்த விலை, வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை. இந்த மூன்றும்தான் பகார்டியின் பிசினஸ் மந்திரம். சகோதரரின் ஜெனரல் ஸ்டோரிலேயே ரம்மை விற்பனைக்கு வைக்க, ஒரே நாளில் சாண்டியாகோ முழுவதும் பிரபலமானார் பகார்டி.

ஆர்டர்கள் குவிய, 1862ல் ரம் தயாரிக்க ‘பகார்டி, பவுட்டிலியர் அண்ட் கம்பெனி’ என்று சிறிய அளவில் ஒரு மது ஆலையை நிறுவினார். ஆலையின் உத்திரத்தில் வௌவால்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ‘வௌவால், குடும்பத்துக்கு அதிர்ஷ்டம்...’ என்று பகார்டியின் மனைவி சொல்ல, அதுவே ‘பகார்டி’யின் லோகோவாகிவிட்டது.

அடுத்த சில வருடங்களில் உடல்நிலையின் பொருட்டு பிசினஸிலிருந்து பவுட்டிலியர் விலகிக்கொள்ள, ‘பகார்டி’ என்ற பெயர் மட்டும் வரலாற்றில் நிலைத்து நின்றுவிட்டது. 1870, 80, 90களில் ‘பகார்டி’யின் ரம் கியூபா முழுவதும் விற்பனையில் சக்கைப்போடு போட்டது. பிசினஸை நல்ல நிலைக்குக் கொண்டு வந்த பகார்டி ஓய்வெடுத்துக் கொள்ள, மகன்கள் எமிலியோ, ஃபகுண்டோ ஜூனியர், ஜோஸும் பொறுப்புக்கு வந்தனர். அவர்களும் தந்தையின் பிசினஸ் மந்திரத்தையே பின்தொடர்ந்தனர்.

அரசியலிலும் பிசினஸிலும் ஜாம்பவானாகத் திகழ்ந்த எமிலியோவும் அவருக்குப் பிறகு வந்த வாரிசுகளும் ‘பகார்டி’யை உலகின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டனர்.

*சில நிகழ்வுகள்

1888ம் வருடம் சிறந்த ரம்முக்கான தங்க விருது கிடைக்க, காட்டுத்தீயைப் போல ‘பகார்டி’யின் பெயரும் புகழும் பரவத்தொடங்கியது. ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஸ்பெஷல் மது உட்பட பணக்காரர்கள், பிரபலங்களின் பட்டியலிலும் ‘பகார்டி’ இடம்பிடிக்கத் தொடங்கியது. ‘ரம்’ என்று சொல்லாமல் ‘பகார்டி ஒரு பாட்டில்’ என்று வாடிக்கையாளர்கள் சொல்ல ஆரம்பித்தனர். இன்றும் கூட நம்ம ஊர் டாஸ்மாக்கிற்குச் சென்றால் ‘பகார்டி ஒரு பாட்டில்’ என்று வாடிக்கையாளர்கள் சொல்தைக் கேட்க முடியும்.

1898ம் வருடத்தின் கோடைகாலம். கியூபாவில் உள்ள டைகுய்ரி கிராமம். அங்கே அமெரிக்காவைச் சேர்ந்த எஞ்சினியர் ஜென்னிங்ஸ், சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்காக எலுமிச்சை ஜூஸ், பகார்டி ரம், சர்க்கரை, ஐஸ்கட்டிகளைச் சேர்த்து ஒரு காக்டெயிலை உருவாக்கினார்.

அதற்குப் பிறகு 1900ல் கியூபாவில் பகார்டி ரம்மைப் பயன்படுத்தி இன்னொரு காக்டெயில் கலக்கப்பட்டது. இதன் சுவையும் கிக்கும் பிடித்துப்போக, மக்கள் தங்களுக்குப் பிடித்த மாதிரி காக்டெயிலை உருவாக்க ஆரம்பித்தனர்.

இப்படித்தான் காக்டெயில் கலாசாரம் ஆரம்பித்தது.1910ல் கியூபாவின் முதல் சர்வதேச நிறுவனமாக உயர்ந்தது ‘பகார்டி’. ஸ்பெயினில் முதல் விற்பனை ஆரம்பிக்க, அது நியூயார்க் வரை எதிரொலித்தது. அமெரிக்கர்களின் விருப்பமான ரம்மாக மாறியது ‘பகார்டி’.1920களில் அமெரிக்காவில் மது விற்பனைக்கும் தயாரிப்புக்கும் தடைவிதிக்கப்பட்டது. இது சில ஆண்டுகள் நீடித்தது. அங்கே கொடிகட்டிப் பறந்த ‘பகார்டி’யின் பிசினஸ் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

‘பகார்டி’யின் ரம்மிற்காக அமெரிக்கர்கள் மந்தை மந்தையாக கியூபாவை நோக்கிப் படையெடுத்தது வரலாறு. ‘பகார்டி’யின் பெயரை உலகம் முழுவதும் உள்ள மதுப்பிரியர்கள் உச்சரிக்கத் தொடங்கினர்.1930ல் மெக்சிகோ, பியர்டோ ரிகோவில் தனது கிளைகளைப் பரப்பியது. கியூபாவுக்கு வெளியில் ‘பகார்டி’ ரம் தயாரித்த முதல் நாடாக மெக்சிகோ புகழடைந்தது. பியர்டோ ரிகோவிலுள்ள ‘பகார்டி’யின் மது ஆலைதான் இன்று உலகிலேயே மிகப்பெரிய ரம் தயாரிக்கும் ஆலை.

1960களில் கியூபாவின் கம்யூனிச அரசு, பல்வேறு அரசியல் காரணங்களால் ‘பகார்டி’யின் சொத்துகளைப் பறிமுதல் செய்தது. நஷ்டஈடு எதுவும் வழங்கப்படவில்லை. அமெரிக்கா, ஸ்பெயின், பஹாமாஸ், மெக்சிகோ, பியர்டோ ரிகோவில் பிசினஸை பரப்பியிருந்ததால் கியூபாவைவிட்டு நிரந்தரமாக வெளியேறியது ‘பகார்டி’. இன்றுகூட கியூபாவில் ‘பகார்டி’யின் தயாரிப்புகளைக் காண்பது அரிது.1965ல் புதிய தலைமையகத்தை பெர்முடாவில் திறந்தது. இது ஐரோப்பிய நாடுகளுடனான பிசினஸைப் பலப்படுத்த பாலமாக அமைந்தது. இன்றும் பெர்முடாவில் உள்ள தலைமையகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

1979ல் உலகளவில் 1.6 கோடி பெட்டிகள் ‘பகார்டி’ ரம் விற்பனையானது. உலகின் நம்பர் ஒன் ஸ்பிரிட் பிராண்டாக விஸ்வ

ரூபம் எடுத்தது ‘பகார்டி’.

1993ல் ‘மார்ட்டினி அண்ட் ரோஸி’ குரூப்பைக் கையகப்படுத்தியது.

1995ல் ‘பகார்டி’ லெமன் அறிமுகமானது. இதுவரை வெளியான புதிய மது வகைகளில் பெரும் வெற்றியடைந்தது இதுதான்.

1998ல் ‘டேவர்’ஸின் ஸ்காட்ச் விஸ்கியையும் ‘பாம்பே சஃபையரி’ன் ஜின்னையும் உடைமையாக்கி உலகின் நான்காவது பெரிய மது தயாரிக்கும் நிறுவனமாக உயர்ந்தது.

2003ல் பல கோடி ரூபாய் செலவில் பியர்டோ ரிகோவில் உள்ள ஆலையில் பார்வையாளர்களுக்காக ஒரு மையம் திறக்கப்பட்டது. இங்கே பகார்டியின் குடும்பம், வரலாறு, ரம் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். இது ஒரு சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது.

உலகின் நம்பர் ஒன் சூப்பர் பிரீமியம் வோட்கா நிறுவனமான ‘கிரே கூஸை’ 2004ல் தன்வசப்படுத்தியது ‘பகார்டி’. தரமான கோதுமை மற்றும் பிரான்ஸின் குடிநீர்தான் இந்த வோட்காவின் மூலப்பொருட்கள்.

2012ல் பகார்டியின் 150வது வருடம் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த நூற்றுக்கணக்கான பார்ட்டிகளில் உலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

2018ல் உலகளவில் அதிகம் விற்பனையாகும் டெக்கீலா பானத்தை தயாரிக்கும் நிறுவனமான ‘பேட்ரன்’, பகார்டியின் குடும்பத்துடன்

இணைந்தது.

*தயாரிப்புகள்

ரம், டெக்கீலா, ஸ்காட்ச் விஸ்கி, போர்போன், அமெரிக்கன் விஸ்கி, வோட்கா, ஜின், வெர்மவுத், ஸ்பார்க்லிங் ஒயின் உட்பட அனைத்து வகையான மதுபானங்கள்.

*இன்று

சுமார் 170 நாடுகளில் பகார்டியின் தயாரிப்புகள் விற்பனையாகின்றன. உலகெங்கும் 20க்கும் அதிகமான இடங்களில் மது ஆலைகள் இயங்குகின்றன. ‘பகார்டி’, ‘கிரே கூஸ்’, ‘பேட்ரன்’, ‘மார்ட்டினி’ என 200க்கும் மேலான பிராண்டுகள் மற்றும் லேபிள்களில் மது வகைகளை உற்பத்தி செய்கிறது.

7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த ஃபகுண்டோ எல் பகார்டி சேர்மனாக நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

சென்னையைச் சேர்ந்த மகேஷ் மாதவன்தான் பகார்டி யின் தலைமைச் செயல் அதிகாரி. பகார்டி குடும்பச் சொத்தின் மதிப்பு சுமார் 1.39 லட்சம் கோடி ரூபாய்!

*புத்தகங்களும் திரைப்படங்களும்

பகார்டியின் குடும்பத்தைப் பற்றி ‘Bacardi and the Long Fight for Cuba’ என்ற புத்தகமும், ‘Bacardi: The Mixed One’ என்ற குறும்படமும், ‘2 Hearts’ என்ற படமும் வெளியாகியுள்ளன.

த.சக்திவேல்

Related Stories:

>