நாகை மாவட்டத்தில் வயலில் சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி மும்முரம்

நாகை:காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கடந்த ஆண்டு ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து வாய்க்கால் தலைப்பு பகுதி மற்றும் தண்ணீர் எளிதாக பாசனம் பெறும் பகுதியில் மட்டும் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு பின் தாளடி சாகுபடி செய்யப்பட்டது. குறுவை சாகுபடி செய்யப்படாத மற்ற பகுதியில் நீண்ட நாள் நெல் பயிரான 165 நாள் வயதுடைய சி.ஆர்.1009, மத்திய கால ரகமான 135 நாள் வயதுடைய பி.பி.டி. உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டது. இந் நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நேரத்தில் குறுவை அறுவடை பணியை பாதித்தது. இந்நிலையில் சம்பா நெல் பயிர்கள் ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு கன மழை பெய்ததால் நெல்கதிர் வரும் நிலையிலும், கதிர் வந்த நிலையிலும் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கியதோடு நெல் பயிர்கள் சாய்ந்தது. சாய்ந்து தண்ணீரில் மூழ்கிய நெல் பயிர்களின் நெல் மணிகள் முளைக்க தொடங்கியது.

அறுவடைக்கு தயாரான நெல் பயிர்களை அறுவடை செய்ய கடந்த 10 நாட்களாக 500க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரம் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆத்திரா மாநிலங்களில் இருந்தும் வந்து மழையால் அறுவடை செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடிக்க தொடங்கியது. ஆனால் வெள்ள நீர் வடியாமல் வயலில் தேங்கி கிடக்கிறது. இதனால் அறுவடை இயந்திரம் கொண்டு சாய்ந்த பயிர்களையும், சேற்றிலும் அறுவடை செய்ய முடியாததால் அறுவடை பணி மேலும் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் அறுவடைக்கு தயாரனா நிலையில் மழை, வெள்ளத்தால் சாய்ந்து முளைக்க தொடங்கிய நெல் பயிரை விவசாயிகள் இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாததால் தொழிலாளர்களை கொண்டு அறுவடை செய்ய தொடங்கியுள்ளனர். சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைத்த நெல் பயிரை சம்பளத்திற்கு ஆட்களை கொண்டு அறுவடை செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலையிலும் விளைவித்த நெல்லை விட மனம் இல்லாமல் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

Related Stories:

>