ஓராண்டுக்கு முன் ரூ.2 கோடியில் சீரமைக்கப்பட்டது ஊட்டி பஸ் நிலையத்தில் மேற்கூரை சேதம்: தரமற்ற பணியால் பயணிகள் அதிருப்தி

ஊட்டி:   நீலகிரியில் சாலை போக்குவரத்து வசதியை மட்டுமே நம்பியுள்ளனர். அரசு பஸ் மட்டுமே பிரதான போக்குவரத்து சாதனமாக உள்ளது. ஊட்டி கிளை 1, கிளை 2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் மேட்டுபாளையம் கிளை 2 ஆகியவற்றை உள்ளடக்கி ஊட்டி மண்டலம் செயல்பட்டு வருகிறது. ஊட்டியில் மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் கிராமப்புறங்களுக்கும், கோவை, ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் என சுமார் 300க்கும் மேற்பட்ட பஸ்கள் தினசரி இயக்கப்படுகிறது. இது தவிர ெவளியூர்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்றனர். இந்த சூழலில் ஊட்டி மத்திய பஸ் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டது.

இதனை சீரமைக்க வேண்டும் என பல்ேவறு தரப்பினரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்ததன் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டு ரூ.2 ேகாடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின் 2018ம் ஆண்டு அக்டோபரில் சீரமைப்பு பணிகள் துவங்கியது. தரை தளம் இன்டர்லாக் கற்கள் அமைப்பு, மேற்கூரை சீரமைப்பு, பயணிகள் அமரும் பகுதியில் இருக்கைகள் அமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சீரமைப்பு பணிகளில் தரமில்லை என்ற புகார் நிலவிய நிலையில், அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. ஓராண்டிற்குள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட பால் சீலிங் எனப்படும் மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது.

பயணிகள் அமரும் பகுதியில் இதுபோன்று கூடை பெயர்ந்து விழுந்து வருவதால் விபத்து ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. தரமற்ற பொருட்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பணியே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு இதனை சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 இதுகுறித்து விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், ஊட்டி மத்திய பஸ் நிலையம் நீண்ட இழுபறிக்கு பின்பு சீரமைக்கப்பட்டது. ஆனால் தரமற்ற பணியால் மேற்கூரைகள் உடைந்து விழுந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இதனை உடனடியாக சரி செய்ய போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: