கொல்லிமலையில் தொடர் மழை 10 ஆண்டுக்கு பின் நிரம்பி வழியும் பொம்மசமுத்திரம் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள பொம்மசமுத்திரம் ஏரி, 10 ஆண்டுகளுக்கு  பின் நிரம்பியதை அடுத்து, உபரிநீர் வெளியேறி வருகிறது.நாமக்கல்  மாவட்டம், கொல்லிமலையில் கடந்த 10 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக  அடிவாரம் காரவள்ளி பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே  நிரம்பிய துத்திகுளத்திலுள்ள சின்னகுளம் ஏரியில் இருந்து, உபரிநீர் அதிக  அளவு பொம்மசமுத்திரம் ஏரிக்கு சென்றது. இதனால் ஏரி தனது முழு கொள்ளளவை  எட்டியதுடன், உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்த நீர் பொன்னார் குளத்திற்கு  சென்று அங்கிருந்து தூசூர் ஏரிக்கு செல்கிறது. இதுகுறித்து அப்பகுதி  விவசாயிகள் கூறுகையில் ‘10 ஆண்டுக்கு பின், தற்போது பொம்மசமுத்திரம் ஏரி  நிரம்பி உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதியை  பெறும். ஏரியின் முகத்துவாரத்தில் இருந்து தண்ணீர் செல்லும் சோமேஸ்வரர்  நீர்வழிப்பாதை பகுதியில் அதிக அளவில் சேந்தமங்கலம் பேரூராட்சியின் குப்பை  கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதால், தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக, நீர்வழி பாதையில்  உள்ள குப்பைகளை தூர்வாரி அகற்ற வேண்டும்,’ என்றனர்.

மலைப்பாதையில் பாறை விழுந்தது

கொல்லிமலையில் கடந்த 10  நாட்களாக பெய்து  வரும் கனமழையால், மலைப்பாதையில் ஆங்காங்கே மரங்கள், பாறைகள் சரிந்து  விழுந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, 66வது கொண்டை ஊசி  வளைவில் சிறிய பாறை ஒன்று சாலையில் விழுந்தது. இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பணியாளர்கள், பாறையை  உடைத்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

Related Stories: