நிலம் கையகப்படுத்தும் விவகாரம் : விவசாய இடங்களில் நுழையவோ, பயிர்களை அப்புறப்படுத்தவோ கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவு!!

புதுடெல்லி:நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் விவசாய இடங்களில் நுழையவோ அல்லது பயிர்களை அப்புறப்படுத்தவோ கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்தப் புதிய சட்டத்திலிருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான, மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் 2015ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இதற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

 இதையடுத்து மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2015யை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எந்த இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது என்றும், அதேப்போல் ஏற்கனவே மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர்ந்து நடக்க அனுமதி வழங்கப்படுகிறது என கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட சட்டப்பிரிவில் சிறிய திருத்தம் செய்த தமிழக அரசு 2019ம் ஆண்டு நில ஊர்ஜித சட்டம் என குறிப்பிட்டு மீண்டும் நிலம் கையகப்படுத்துதலை மேற்கொள்ள முன்வந்தது. இதனை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த சொக்கப்பன் உள்ளிட்ட 55 விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

   இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவகாரத்தில் சொக்கப்பன் உட்பட 55 விவசாயிகளை அவர்களின் நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தவோ அல்லது நுழைவதற்கோ தமிழக அரசுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது. இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இது தொடரும். மேலும் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் பிப்ரவரி 16ம் தேதி இறுதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டனர். 

Related Stories: