திறமையான இளம்வீரர்களை கண்டறிவதில் ராகுல் டிராவிட்டை பின்பற்ற வேண்டும்: சாகித் அப்ரிடி வலியுறுத்தல்

லாகூர்: இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட், ஓய்வுக்கு பின் 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அப்போது திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து ஊக்குவித்து வலுவான இந்திய அணியை கட்டமைக்க உதவியாக இருந்தார். தற்போது டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். இந்நிலையில் லாகூரில் நடந்த விழா ஒன்றில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித்அப்ரிடி, இந்தியா ஏ அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றிய டிராவிட்டின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறு நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை வலியுறுத்தினார்.

தரமான திறமைகளின் பற்றாக்குறையை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இன்சமாம் உல்ஹக், யூனிஸ்கான், முகமது யூசுப் ஆகியோர், டிராவிட்டை போன்று இளம்வீரர்களின் திறமைகளை வடிவமைப்பதிலும், மெருகூட்டுவதிலும் கவனம் செலுத்தவேண்டும், என்றார். பயிற்சியாளர்களுடன் பிரச்னையால் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் ஓய்வு அறிவிப்பு பற்றி கருத்து தெரிவித்த அப்ரிடி,அது பழைய பிரச்னை, என் காலத்தில் கூட பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சியாளர்களுடன் பிரச்னை இருந்தது. அதிருப்தி வீரர்களுடன் பிசிபி நிர்வாகிகள் வெளிப்படையாக பேசினால் தான் இதனை தடுக்க முடியும், என்றார்.

Related Stories: