மூட்டுவலியை முடக்கும் முடக்கத்தான்!

நன்றி குங்குமம் தோழி

கை கால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது முடக்கத்தான் கீரை. முடக்கத்தைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது என்பதாலேயே, முடக்கறுத்தான் எனப் பெயர் பெற்று வந்தது. நாளடைவில் முடக்கத்தான் என்று மருவியது.

இந்த கீரையின் இலை மற்றும் வேர் இரண்டுமே ஏராளமான மருத்துவப் பலன்களைக் கொண்டவை. தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக தஞ்சை மாவட்ட கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். மூட்டுவலியை முற்றிலுமாக குணப்படுத்த இயற்கையான முறையில் பல வழிகள் உண்டு. இந்த கீரையை எவ்வாறு சாப்பிடுவது மற்றும் பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்வோம்.

*முடக்கத்தானை சீராக உணவில் சேர்த்துவந்தால், வாத நோய்கள் நீங்கும், உடல் பலமடையும், மலம் இளகும், பசியைத் தூண்டும், கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கும்.

*முடக்கத்தான் கீரையைப் பச்சையாக எடுத்து, ரசமாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால், கை, கால் குடைச்சல், மூட்டுவலி நீங்கும்.

*முடக்கத்தான் கீரையை விளக் கெண்ணெயில் வதக்கி, மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம், வீக்கம், வலி இருக்கும் இடத்தில் கட்டுப்போட்டு வந்தால் வலி, வீக்கம் குறைந்து, நோய் குணமாகும்.

*முடக்கத்தான் இலையைப் பொடி செய்து, அதனுடன் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், சித்திர மூல வேர்ப்பட்டைப் பொடி, கரிய போளம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சூதக்கட்டு நீங்கும்.

*முடக்கத்தான் இலைகளை வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டினால், உதிரப்போக்கை ஒழுங்குபடுத்தும்.

*முடக்கத்தான் கீரையை் தனியாகவோ அல்லது வேருடன் சேர்த்தோ நீரில் கலந்து குடித்து வந்தால், மூலநோய், நாள்பட்ட இருமல் நீங்கும்.

*முடக்கத்தான் கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

*குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

*மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்களை கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

*முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.

*இந்த கீரையில் தோசை அல்லது துவையல் செய்து சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரை தோசை

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து  தோசை வார்த்து சாப்பிடலாம். அல்லது இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதாரணத் தோசை மாவுடன் கலந்தும் தோசை வார்க்கலாம். காரமான தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

-ஷம்ரிதி

Related Stories: