பிப்ரவரி 17ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: 32வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் இன்று முதல்  பிப்ரவரி 17ம் தேதி வரை ஒரு மாத காலம் ”சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு”  என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ”சாலைப் பாதுகாப்பு மாதம்” கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் இன்று (18ம் தேதி) முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை ஒரு மாத காலம் ”சாலை பாதுகாப்பு -உயிர் பாதுகாப்பு” என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்படும்.

 தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவில், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது குறித்த உறுதிமொழி எடுத்தல், ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துதல், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துதல், சிறப்பு வாகன சோதனைகள் நடத்துதல், தொடர் விபத்து சாலைகளை கண்டறிதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உதவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>