×

பாஜ, அதிமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுக்க முடியாது: கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு

சென்னை: தமிழக மக்கள் மோடி மீது இருக்கிற வெறுப்பை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்த தான் போகிறார்கள். பாஜ, அதிமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குருமூர்த்தி பாஜவுக்கு வரம்பு மீறி வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கிறார். சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொண்டு திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்று ஆலோசனை கூறியிருக்கிறார்.  

தேவையில்லாமல் திமுக, காங்கிரஸ் கூட்டணியை குருமூர்த்தி சீண்டிப் பார்த்திருக்கிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, அதிமுக, பாஜ கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியைப் பற்றி கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., வகுப்புவாத சக்திகளின் ஊதுகுழலாகக் குருமூர்த்தி செயல்பட்டு வருகிறார். தற்போது, பாஜவுக்கும், அதிமுகவுக்கும் கூட்டணியை ஏற்படுத்த அரசியல் தரகராக மாறியிருக்கிறார்.

தமிழக மக்கள் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறார்கள். தமிழக மக்கள் நேரு பாரம்பரியத்தில் வந்த ராகுல் காந்தியை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதற்கு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சான்றாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. அதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் ஜல்லிக்கட்டு குறித்து ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். எனவே, தமிழ் மக்கள் மோடி மீது இருக்கிற வெறுப்பை மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெளிப்படுத்தத்தான் போகிறார்கள். அதனால், பாஜ, அதிமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : BJP ,AIADMK ,attack ,KS Alagiri ,priests , BJP, AIADMK alliance will not be completely wiped out even if a thousand priests come: KS Alagiri
× RELATED வங்கி மேலாளர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சி வெளியீடு