எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலைக்கு நேற்று காலை 10 மணி அளவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர், அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர். முன்னதாக அதிமுக கொடியை இருவரும் சேர்ந்து ஏற்றி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழக வளாகத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்கு உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் அனைத்து அமைச்சர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமை கொறடா மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் எம்.ஜி. ஆரின் 104வது பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடினர். அவர் படங்களில் இடம்பெற்ற திரைப்பட பாடல்களும் ஒளிபரப்பப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் அமைந்துள்ள இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அண்ணா சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர் வாழ்ந்த சென்னை ராமாவரம் தோட்டத்திலும் அவரது சிலைக்கு மாலை அணித்து மரியாதை செய்யப்பட்டது.

Related Stories: