பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 88 ரூபாயாக எகிறியுள்ளது. டீசல் விலை 80 ரூபாயை தாண்டிவிட்டது. இன்னும் ஓரிரு நாளில் வரலாறு காணாத வகையில் இந்த விலை உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு புதிய உச்சத்தை எட்டக்கூடும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக வருமானம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் சமூக அக்கறையோடும், அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய கடமை உணர்வோடும் மத்திய அரசும், மாநில அரசும் பரிசீலிக்க வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியான  நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் துணிச்சலோடு மாநில அரசு முன்வைக்க வேண்டும். மேலும் மக்களின் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு, பெட்ரோல் - டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: