அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி திமுகவில் இணைந்தனர்: தமிழக அரசியலில் பரபரப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர். முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என 25 ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இந்நிலையில் 3 ஆண்டுகளாக எந்த ஒரு கல்லையும் அசைக்காமல் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். தொடர்ந்து, அரசியலுக்கு வரப் போவதில்லை என உறுதியாக அறிவித்தார்.

இதனால் அவரது ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். தான் அரசியலுக்கு வர இயலாது என்பதை ரஜினி மீண்டும் ஒரு காட்டமான அறிக்கை மூலம் வெளிப்படுத்தினார். இதனால் மாற்று கட்சியில்  இணைய சிலர் முடிவு செய்தனர். அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்டச் செயலாளர்கள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதபோன்று ரஜினி மக்கள் மன்றத்தினர் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதால் இன்னும் ஏராளமானோர் திமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச்  செயலாளர்களான தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு, தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், ராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் செந்தில்வேல், ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.  

அதைப்போன்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் திமுகவில் இணைந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா  எம்.பி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர்கள் விடுதலை, என்.ஆர்.இளங்கோ எம்.பி, சட்டத்துறைத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம்,  சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் பி.வில்சன், எம்.பி, திமுக மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு மற்றும் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இணைச் செயலாளர் ஷாஜகான் ஆகியோர் உடனிருந்தனர்.

திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஏற்கெனவே திமுகவில் இருந்தேன். அது போல் ரஜினி ரசிகர் மன்றத்திலும் இருந்தேன். ரஜினி கட்சி தொடங்குவார் என்பதால் அவருடன் பயணித்தேன். தற்போது அவர் கட்சி தொடங்காதது வருத்தம் அளித்தாலும் அவர் சொல்லும் காரணம் நியாயமானது. தலைமையிடம் கூறினோம். இதனால் நான் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன். கட்சியில் சேருவதை நான் தலைமையிடம் கூறினேன்.

எந்த கட்சியில் சேர வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினர். இதனால் நான் ஏற்கெனவே இருந்த கட்சியான திமுகவில் தற்போது இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலினின் சென்னை முகவரியில் தான் ரஜினி தன் கட்சியை பதிவு செய்து வைத்ததாக முதலில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் உள்பட மாவட்ட செயலாளர்கள் விலகி திமுகவில் இணைந்திருப்பது தமிழிக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: