அமெரிக்காவின் புதிய அதிபராகும் பிடென் ஆட்சி நிர்வாகத்தில் 20 இந்திய வம்சாவளியினர்: வெள்ளை மாளிகையில் 17 பேருக்கு முக்கிய பொறுப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அமையும் பிடென் அரசில், 20 இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடென் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளார். அவருடைய புதிய அரசு, ஆரம்பத்திலேயே பல்வேறு சாதனையை படைக்க காத்திருக்கிறது. அந்த சாதனையை படைக்கப் போகிறவர்கள் அமெரிக்க வாழ் இந்தியர்கள். புதிய துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் மட்டுமல்ல, முதல் இந்திய வம்சாவளி, கறுப்பினத்தை சேர்ந்தவரும் கூட. இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க விரும்பும் பிடென், தனது நிர்வாகத்தில் மொத்தம் 20 இந்திய வம்சாவளிகளுக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகளை வழங்கி கவுரவித்துள்ளார். அதோடு வெள்ளை மாளிகையில் 17 முக்கிய பொறுப்புகளில் இந்திய வம்சவாளியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* வெள்ளை மாளிகை அலுவலக மேலாண்மை மற்றும் பட்ஜெட் இயக்குநராக நீரா டான்டன் பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

* அமெரிக்க தலைமை மருத்துவராக (சர்ஜன் ஜெனரல்) விவேக் மூர்த்தி பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

* நீதித்துறையின் இணை அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

* பிடெனின் மனைவி ஜில் பிடெனின் கொள்கை இயக்குநராக மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார்.

* துணை ஊடக செயலாளராக சபரினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

* காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட ஆயிஷா ஷா, வெள்ளை மாளிகையின் டிஜிட்டல் யுக்தி பிரிவின் பார்ட்னர்ஷிப் மேலாளராகவும், சமீரா பஸிலி தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவி பாரத் ராமமூர்த்தி, கவுதம் ராகவன், வினய் ரெட்டி, வேதாந்த் படேல் உள்ளிட்ட பலர் முக்கிய பொறுப்பில் இடம் பெற்றுள்ளனர். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் 3 இந்திய வம்சாவளிகள் இடம் பெற்றுள்ளனர்.  

அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே கொண்ட இந்திய வம்சாளிகளில் இவ்வளவு பேர், அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல் நாளில் 12 கையெழுத்து

அமெரிக்க அதிபராக பிடென் பதவியேற்ற முதல் நாளிலேயே 12க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அமெரிக்கா சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளான கொரோனா நெருக்கடி, அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பருவநிலை நெருக்கடி, இனபாகுபாடு நெருக்கடி ஆகிய 4 விவகாரங்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பிடென் தொடங்கி வைக்கப் போகிறார்.

* கோலம் போட்டு வரவேற்பு

பிடென் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அமெரிக்க தேசிய கொடி, அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பிடென், கமலா ஹாரிசை வரவேற்க அங்குள்ள தமிழர்கள் தமிழ் பாரம்பரிய முறைப்படி பிரமாண்ட கோலம் போட திட்டமிட்டுள்ளனர். இதற்கு போலீசாரும் அனுமதித்துள்ளனர். 1,800 பேர் இணைந்து நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பாக பல வகையான வண்ண கோலங்களை போட்டு அசத்தி வருகின்றனர்.

Related Stories: