முதல் நாளில் அதிக தடுப்பூசி போட்டதில் முதல் இடத்தில் உ.பி.: 11 மாநிலங்களில் 2 மருந்தும் பயன்பாடு

புதுடெல்லி: அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட முதல் நாளிலேயே கொரோனா தடுப்பூசி அதிகளவில் போடப்பட்ட மாநிலத்தில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தை பிடித்துள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நாடு முழுவதும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதில், நாடு முழுவதும் 3,352 மையங்கள் அமைக்கப்பட்டு, முதல் நாளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 181 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், தமிழகம், அசாம், பீகார், டெல்லி, அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் கோவாக்சின், கோவிஷீல்டு இரு தடுப்பூசிகளும் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் போடப்படுகிறது. இந்நிலையில், முதல் நாளில் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் கொரோனா தடுப்பூசி போட்டனர் என்ற விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

* கேரளாவில் அதிக நோயாளிகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 985. இதில், ஒரு கோடியே 1 லட்சத்து 96 ஆயிரத்து 885 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 8,826 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 2 சதவீதத்திற்கும் (1.98%) குறைந்துள்ளது. தற்போது, கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போரில் அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலமாக கேரளா உள்ளது. அங்கு, 68,633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 53,163, உபியில் 9,162, கர்நாடகாவில் 8,713, மேற்கு வங்கத்தில் 7,151, தமிழகத்தில் 6,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* 6 மாநிலத்தில் மட்டும் 2ம் நாளில் தடுப்பூசி

தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு 2ம் நாளான நேற்று ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் மனோகர் அக்னனி கூறுகையில், ‘‘2ம் நாளில் 6 மாநிலங்களில் 17,072 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2 நாட்கள் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் நாளில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 229 பேர் தடுப்பூசி பெற்றுள்ளனர்’’ என்றார்.

* 447 பேருக்கு பக்கவிளைவு

முதல் நாள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதில் யாருக்கும் பக்கவிளைவால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய பாதிப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியிருந்தது. இதற்கிடையே, டெல்லியில் 51 பேருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டதாக அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நேற்று தெரிவித்தார். ஒருவருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டதால் அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். இதே போல, கொல்கத்தாவில் 35 வயது நர்ஸ் தடுப்பூசி போட்டதும் மூச்சு திணறல் ஏற்பட்டதாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் தற்போது நலமாக இருப்பதாக அம்மாநில அரசு தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் மனோகர் அக்னனி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தடுப்பூசி போட்ட 447 பேருக்கு காய்ச்சல், இருமல் போன்ற லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் 3 பேரை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமிருந்தது. 3 பேரும் சிகிச்சைக்குப் பின் நலமுடன் உள்ளனர்’’ என்றார்.

Related Stories:

>