சுந்தர் - தாகூர் ஜோடி அபார ஆட்டம் முதல் இன்னிங்சில் இந்தியா 336 ரன் குவிப்பு: 5 விக்கெட் வீழ்த்தினார் ஹேசல்வுட்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், வாஷிங்டன் சுந்தர் - ஷர்துல் தாகூர் ஜோடியின் உறுதியான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன் குவித்தது. கபா ஸ்பேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்து ஆல் அவுட்டானது. லாபுஷேன் அதிகபட்சமாக 108 ரன் விளாசினார். வேடு 45, கிரீன் 47, கேப்டன் பெய்ன் 50 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் சுந்தர், நடராஜன், தாகூர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்திருந்தது.

புஜாரா 8 ரன், கேப்டன் ரகானே 2 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தனர். புஜாரா 25 ரன் (94 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட் கீப்பர் பெய்ன் வசம் பிடிபட்டார். அடுத்து ரகானேவுடன் மயாங்க் அகர்வால் இணைந்தார். இந்த ஜோடி 39 ரன் சேர்த்த நிலையில், ரகானே 37 ரன் எடுத்து (93 பந்து, 3 பவுண்டரி) ஸ்டார்க் பந்துவீச்சில் வேடு வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பொறுப்புடன் விளையாடிய அகர்வால் 38 ரன் (75 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ரிஷப் பன்ட் 23 ரன் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணி 66.3 ஓவரில் 186 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. எஞ்சிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி கணிசமான முன்னிலை பெறும் முனைப்புடன் ஆஸி. வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். எனினும், சுந்தர் - தாகூர் ஜோடி மிகுந்த மன உறுதியுடன் எதிர்த்து போராடியது. இவர்களைப் பிரிக்க முடியாமல் ஆஸி. பவுலர்கள் விழிபிதுங்கினர். எதிரணியை விரக்தியின் எல்லைக்கே விரட்டிய இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்து அசத்த, இந்திய அணி ஸ்கோர் 300ஐ கடந்தது. தாகூர் 67 ரன் (115 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார்.

சைனி 5 ரன்னில் வெளியேற, சுந்தர் 62 ரன் (144 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஸ்டார்க் பந்துவீச்சில் கிரீன் வசம் பிடிபட்டார். முகமது சிராஜ் 13 ரன் எடுத்து ஹேசல்வுட் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன் குவித்து (111.4 ஓவர்) ஆல் அவுட்டானது. நடராஜன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, 33 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்துள்ளது. ஹாரிஸ் 1 ரன், வார்னர் 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 10 விக்கெட் இருக்க, ஆஸி. அணி 54 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் 4வது நாள் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* 30 ஆண்டு சாதனை முறியடிப்பு...

சுந்தர் - தாகூர் ஜோடி 123 ரன் சேர்த்தது, பிரிஸ்பேன் மைதானத்தில் 7வது விக்கெட்டுக்கு ஒரு இந்திய இணை சேர்த்த அதிகபட்ச ரன்னாக அமைந்தது. முன்னதாக, கபில்தேவ் - மனோஜ் பிரபாகர் ஜோடி 1991ல் இங்கு 58 ரன் சேர்த்து படைத்த சாதனை நேற்று தகர்க்கப்பட்டது. 6வது விக்கெட்டாக ரிஷப் பன்ட் வெளியேறியதும், இந்திய அணி மிக விரைவில் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. 100 ரன்னுக்கும் அதிகமாக முன்னிலை பெறலாம் என்று ஆஸி. வீரர்கள் கண்ட பகல் கனவை சுந்தர் - தாகூர் ஜோடியின் உறுதியான ஆட்டம் கலைத்துவிட்டது. தன்னம்பிகையுடன் விளையாடி திறமையை நிரூபித்த இருவருக்கும் கோஹ்லி, பான்டிங் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* இந்திய அணி ஆல் ரவுண்டர் வாஷிங்டனின் தந்தை பெயர் தான் சுந்தர். கிரிக்கெட் வீரரான அவருக்கு பல வகையிலும் உதவியாக இருந்து ஊக்கமளித்தவர் பி.டி.வாஷிங்டன் என்ற ரசிகர். 1999ல் பி.டி.வாஷிங்டன் இறந்த சில மாதங்களில் பிறந்த தனது மகனுக்கு, அவரது பெயரையே வைத்து நன்றிக்கடன் செலுத்தினார் சுந்தர். பிரிஸ்பேன் டெஸ்டில் வாஷிங்டனின் ஆட்டம் குறித்து கூறுகையில், ‘அவனுடன் தினமும் பேசுவேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தான். சதம் அடிக்காததில் எனக்கு வருத்தம் தான். ஷர்துல் அவுட்டானதும் அதிரடியாக சிக்சர்களை தூக்கியிருந்தால் சாதித்திருக்கலாம். அதற்கான திறமை அவனிடம் உள்ளது என எனக்கு தெரியும்’ என்றார்.

Related Stories: