பாலகோட் தாக்குதல், 370 சட்டப்பிரிவு உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய முடிவுகளை முன்கூட்டியே அறிந்திருந்த அர்னாப்: வாட்ஸ்அப் உரையாடலில் அம்பலம்

புதுடெல்லி: பாலகோட் தாக்குதல், 370 சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய முடிவுகளை பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி முன்கூட்டியே அறிந்தது தொடர்பான வாட்ஸ்அப் உரையாடல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஆர்பி எனப்படும் டிவி சேனல் பார்வையாளர் கணக்கீட்டில் முறைகேடு செய்ததாக ரிபப்ளிக் சேனல் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி மற்றும் முன்னாள் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) சிஇஓ பார்தோ தாஸ்குப்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அர்னாப் மற்றும் தாஸ்குப்தா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் பெறப்பட்டுள்ளன. 3,600 பக்கம் கொண்ட வாட்ஸ்அப் உரையாடல்களை மும்பை போலீசார் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.

அதில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய பாஜ அரசு தனக்கும் தனது சேனலுக்கும் ஆதரவாக இருப்பதாக அர்னாப் கூறி உள்ளார். டிஆர்பி பிரச்னையில் அரசு நிச்சயம் ஆதரவாக செயல்படும் என அர்னாப் சபதம் செய்கிறார். மேலும், இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உதவுவதாகவும் அவர் வெளிப்படையாக கூறி உள்ளார். இதுதவிர, நீதிபதிகளை விலைக்கு வாங்குவது, பொருளாதார குற்றங்கள் நடப்பது எப்படி, அவற்றை உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மூடி மறைப்பது குறித்தும் பேச்சுகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தையும் காட்டிலும், மத்திய அரசு எடுக்கும் பல ரகசியமான முக்கிய முடிவுகளைக் கூட அர்னாப் முன்கூட்டியே அறிந்துள்ளார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயமாக உள்ளது.

பாலகோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்துவதற்கு 3 நாள் முன்பாக அதைப் பற்றி அர்னாப் அறிந்திருக்கிறார். தாஸ்குப்தா உடனான வாட்ஸ்அப் உரையாடலில், ‘பெரிய அளவில் சம்பவம் நடக்க உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கும் மத்திய அரசின் முடிவையும் முன்கூட்டியே அர்னாப் கூறி உள்ளார். இதுபோன்ற தேச பாதுகாப்பு தகவல்களை அவர் அறிந்ததும், சர்வசாதாரணமாக வாட்ஸ்அப்பில் உரையாடியிருப்பதும் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு குறிப்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதில் சொல்ல வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Related Stories:

>