×

மழையால் கொள்முதல் செய்ய மறுப்பு 2,000 மூட்டை நெல்மணிகளில் நாற்றுகள் முளைத்து நாசம்: விவசாயிகள் வேதனை

தஞ்சை: தஞ்சை அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வந்த 2 ஆயிரம் மூட்டை நெல் மழையில் நனைந்து நாற்றுக்கள் முளைத்து நாசமானதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 2.50 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது அறுவடை பணி தொடங்கியுள்ளது. காட்டூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை, காட்டூரிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கடந்த 15 நாட்களுக்கு முன் கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனர்.

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக நெல் மணிகளை கொள்முதல் செய்யாததால் அனைத்து நெல்மணிகளையும் ஒன்றாக கொட்டி தார்பாய் போட்டு மூடி வைத்து இருந்தனர். தொடர் மழையால் நெல்மணிகளில் 50 சதவீதம் நாற்றுக்கள் முளைத்து விட்டன. மீதமுள்ள நெல்மணிகள் பூஞ்சை பிடித்தும், கருத்தும் சேதமாகி விட்டது. இங்கு கொட்டி வைத்துள்ள 5 ஆயிரம் மூட்டைகளில், 2 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசமாகி உள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 2ஆயிரம் மூட்டை நாசமாகியுள்ளது. மீதமுள்ள நெல் மணிகளை உலர்த்த, ஆட்களுக்கு கூலி, உணவுக்கு வழங்கினால் செலவு செய்த தொகை வருமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது என வேதனையுடன் கூறினர்.

விவசாயிகள் திடீர் சாலை மறியல்: சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீர் உடனடியாக வடியாததால் வயலில் மூழ்கிய பயிர்கள் முளைக்கத் தொடங்கி விட்டது. இதுவரை அதிகாரிகள் நேரில் வந்து பயிர் பாதிப்பு குறித்து பார்வையிடவில்லை. கணக்கெடுப்பும் நடத்தவில்லை. இதைக் கண்டித்து விவசாயிகள் சிதம்பரம் புறவழிச்சாலையில் நேற்று மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சிதம்பரம் தாலுகா போலீசார் கைது செய்தனர். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

* அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் முளைத்த வயலில் ஒப்பாரி போராட்டம்
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த அத்திப்புலியூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 600 ஏக்கர் நெல் பயிர்கள் மழையால் சாய்ந்து வெள்ளநீரில் மூழ்கி மிதப்பதோடு, நெல் கதிர்கள் முளைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பெண்கள் நேற்று வயலில் இறங்கி முளைத்த நெற்கதிர்களை பார்த்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறுகையில், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு முழுசேதம் அடிப்படையில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஒப்பாரி போராட்டத்தை நடத்தினோம் என்றனர்.

Tags : Refusal to purchase by rain Destroys seedlings sprouting in 2,000 bundles of paddy: Farmers suffer
× RELATED இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன்...