அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கு தரமற்ற தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் (ஜன. 16) நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்கக்காசுகள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மதுரை மாவட்டம், குறவன்குலத்தைச் சேர்ந்த விஜயன் (24), 8 மாடுகளை பிடித்துள்ளார். இதற்காக அவர் நான்கு தங்கக்காசுகளை பரிசாக பெற்றார். அதை நேற்று அவர் அருகில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்து பரிசோதனை செய்ததில், அவை தரமற்றவை என்பதும், தங்கத்தின் அளவு மிக, மிக குறைவாகவும், செம்பு மற்றும் இரும்பு அதிகளவில் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து மாடுபிடி வீரர் விஜயனின் தந்தை கணேசமூர்த்தி நேற்று கூறுகையில், ‘‘எனது மகன் 4 காளைகளை சிறப்பாக அடக்கியதற்காக ஒரு கிராம் எடையுள்ள நான்கு தங்கக்காசுகளை பரிசாக பெற்றார். இடையில் காயம் ஏற்பட்டதால் களத்திலிருந்து வெளியேற்றினார். இன்று (நேற்று) தங்கக்காசுகளின் தரத்தை நகைக்கடைக்கு சென்று ஆய்வு செய்தேன். அப்போது இந்த 4 தங்கக்காசுகளிலும் மொத்தமாக சேர்த்து வெறும் 500 மில்லி கிராம் மட்டுமே தங்கம் இருப்பது தெரிந்தது. ஒரு கிராம் அளவுக்குக் கூட தங்கம் இல்லை. செம்பும், இரும்பும் தான் மிக அதிகளவில் கலந்திருப்பதாக நகைக்கடைக்காரர் தெரிவித்தார். இதனால் அந்த தங்கக்காசுகளுக்கு தகுதி இல்லாமல் போய்விட்டது.

முதலமைச்சர் கையால் வழங்கிய தங்கக்காசுகள் போலியாக இருப்பது மனவேதனை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் காசுக்காகவோ, பணத்திற்காகவோ விளையாடாமல் வீரத்தை நிலை நிலைநாட்டத்தான் உயிரை பணயம் வைத்து களமிறங்குகின்றனர். பாரம்பரியமுள்ள இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் வீரர்களுக்கு இதுபோன்ற பரிசுப்பொருட்கள் போலியாக வழங்கப்பட்டது வருத்தமளிக்கிறது’’ என்றார். இதுபோல மேலும் பல வீரர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட தங்கக்காசுகளை பரிசோதனை செய்ததில் இந்த விவரம் தெரிந்து, வேதனையடைந்துள்ளனர். இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

* தங்க நாணயமா... செம்பு நாணயமா?

பொதுவாக ஒரு கிராம் தங்க நாணயத்தில், ‘916’ ரகம் என்றால் 80 மில்லி கிராம் அளவுக்கு செம்பும், 920 மில்லி கிராம் தங்கமும் இருப்பது வழக்கம். சாதாரண ரகத்தில், 100 மில்லி கிராம் செம்பும், 900 மில்லி கிராம் தங்கமும் இருக்கும். ஜல்லிக்கட்டுக்கு பரிசாக வழங்கப்பட்ட இந்த தங்க நாணயத்தில் 100 மில்லி கிராம் அளவுக்குத்தான் தங்கம் இருந்துள்ளது. மீதி 900 மில்லி கிராம் அளவுக்கு செம்பும், இரும்பும் இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: