ஏகாம்பரநாதர் கோயிலில் பார்வேட்டை உற்சவம் ரத்து: 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பார்வேட்டை உற்சவம் ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று, பார்வேட்டை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த உற்சவத்தின்போது, ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரத்தில் உள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோயிலுக்கு ஊர்வலமாக செல்வார். அப்போது வழியெங்கும் சுவாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். மேலும் பக்தர்கள் மாவில்கோலமிட்டு வரவேற்பு அளிப்பார்கள். மாலையில், பொதுமக்கள் தரிசனத்திற்கு பின், திம்மசமுத்திரம் கிராமத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு, நள்ளிரவு ஏகாம்பரநாதர் கோவிலை வந்தடைவார்.

இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கால் திம்மசமுத்திரம் பார்வேட்டை உற்சவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஏகாம்பரநாதர், ஏலவார்குழலிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், பம்பை உடுக்கை, தவில், நாதஸ்வரம் இசைக்க, அதிர்வேட்டுகள் முழங்க, ஏலவார்குழலியுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், கோயில் முன்உள்ள, 16 கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு மஹாதீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: