பாஜ 60 சீட் கேட்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி இன்று பேச்சுவார்த்தை: பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகள் கேட்டு பாஜ மிரட்டும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதை தொடர்ந்து, நாளை பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அவருடன் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர் உள்ளிட்டவர்களும் செல்கிறார்கள். இன்று பகல் 11.55 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதல்வர், 2.50 மணிக்கு தமிழ்நாடு இல்லம் செல்கிறார். பின்னர் இரவு 7.30 மணிக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது, பாஜ-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்துவது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும், சசிகலா விடுதலையாவதால் அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அமித்ஷா கலந்துகொண்ட விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர். பின்னர், ஓட்டலில் நடந்த சந்திப்பின்போது, 60 தொகுதிகள் வேண்டும் என்று அமித்ஷா கண்டிப்புடன் கேட்டதாகவும், அதற்கு 34 தொகுதிகள் வரை தர சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அப்போது நடிகர் ரஜினியை சந்திக்கவே வந்ததாகவும், அது முடியாததால், முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் சகஜமாக பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த முறை டெல்லி சென்று தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலின்போது, தமிழக பொறுப்பாளராக இருந்த பியூஸ் கோயல்தான் தொகுதிப் பங்கீடு குறித்து பேசினார். அப்போது, 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி திட்டவட்டமாக கூறிவிட்டார். இப்போது, நேரடியாக அமித்ஷாவே தொகுதிப் பங்கீடு குறித்து பேசுகிறார்.

அதனால், கடந்த முறை போல அதிமுக தலைவர்களால் கறாராக பேச முடியாது. பாஜ தலைமை கேட்கும் தொகுதிகளை கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி தமிழ்நாடு இல்லத்திற்கு இரவு திரும்புகிறார். அங்கு தங்குகிறார். நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கிறார். ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைக்கவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக கூறப்பட்டது.

ஆனால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரது நினைவிடத்தை பிரதமர் திறந்து வைக்கக் கூடாது என்று சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், பிரதமர் மோடியை அழைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள், நதிநீர் இணைப்பு, ஜி.எஸ்.டி நிலுவை தொகையை வழங்குவது உள்ளிட்டவற்றை கோரிக்கையாக வைக்கவும் முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டம், பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம், நெய்வேலி என்எல்சி சூர்ய மின்சக்தி திட்டம், ராமநாதபுரம், தூத்துக்கடி காஸ் குழாய் திட்டம் ஆகிய 5 திட்டங்களை தொடங்கி வைக்கும்படி பிரதமரை அவர் கேட்டுக் கொள்ள உள்ளதாகவும், இதுதவிர அமித்ஷாவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து நடத்தப்பட்ட பேச்சு குறித்தும், தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு அதிக முறை வரும்படி கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாரமனை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை இரவு  8 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

Related Stories: