10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 40 சதவீதம் குறைப்பு: பள்ளிகள் நாளை திறக்கும் நிலையில் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பொதுத் தேர்வுக்காக 40 சதவீதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தையும் பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. அந்த பாடத்திட்டம் நாளை மாணவர்களுக்கு வழங்கப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அடுத்தடுத்த ஊரடங்கு அறிவிப்பால், மாணவர்கள் வீடுகளில் முடங்கினர். இந்நிலையில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தளர்த்தப்பட்ட விதிகளுடன் இன்னும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும் என்று கருதிய அரசு, நவம்பர் மாதம் பள்ளிகளை திறக்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், அதற்கு பெற்றோர் தரப்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் பள்ளிகள் திறப்பதை தள்ளிப் போட்டது அரசு. இந்நிலையில், அண்டை மாநிலங்கள் பள்ளிகளை திறந்து வருகின்றன. மத்திய அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 9,10, 11, 12ம் வகுப்பில் படிப்போர் பாடப் பகுதியில் சந்தேகம் ஏற்பட்டால், பள்ளிக்கு வந்து பாட ஆசிரியர்களை சந்தித்து கேட்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து, தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அதற்காக பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை 12,000 பள்ளிகளில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட பெற்றோர் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்தன. அவை அப்படியே பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர், மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பேரில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஜனவரி 19ம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்றும் மற்ற வகுப்புகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இதையடுத்து, மேற்கண்ட இரண்டு வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வருவதற்கு வசதியாக அனைத்து தூய்மைப் பணிகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 12,500 பள்ளிகள் தற்போது தூய்மைப் பணிகள் முடிந்து திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கின்றன. பள்ளிகள் திறப்பை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர், மற்றும் கல்வி அதிகாரிகள் இணைந்த குழுவை பள்ளிக்கல்வித்துறை அமைத்துள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் தலா இரண்டு மாவட்டங்கள் வீதம் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிடுவார்கள்.

இதற்காக அந்த அதிகாரிகள் இன்றே உரிய மாவட்டங்களுக்கு செல்கின்றனர். கடந்த 9 மாதங்களுக்கு பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 18 லட்சம் மாணவ மாணவியர் நாளை பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்கவும், வகுப்புகளில் இருக்கைகளை முறைப்படுத்தவும், மாணவர்களின் வருகையின் போது செய்ய வேண்டிய சுகாதாரப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் அனைவரும் இன்றே பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதனால் பாட ஆசிரியர்கள் அனைவரும் இன்றே பள்ளிக்கு வருகின்றனர்.இதற்கிடையே, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்டது. இந்த கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்கவில்லை. பாடங்களும் நடத்தப்படவில்லை. எனவே, மே மாதம் பொதுத் தேர்வு வைத்தால் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிப்பது இயலாத செயல். மேலும் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படும். எனவே, தற்போதுள்ள பாடப் புத்தகத்தில் இருந்து 40 சதவீத பாடப் பகுதிகளை பள்ளிக் கல்வித்துறை குறைத்துள்ளது.

குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள் குறித்த விவரங்கள் பள்ளிக் கல்வித்துறை, கல்வி தொலைக்காட்சி மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த பட்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டு, 19ம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள் குறித்த விவரங்கள் வழங்கப்படும். மேலும், பொதுத் தேர்வுக்குரிய மாதிரி கேள்வித்தாள் ஒரு வாரத்தில் வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

* குறைப்பில் குளறுபடி

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நாளை தொடங்க உள்ள நிலையில், தற்போது குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பாடங்களை குறைக்காமல், பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள பயிற்சி வினாக்கள், மாதிரிகள், செய்முறைகள், பயிற்சிகள், போன்றவற்றைதான் குறைத்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், இருக்கின்ற 3 மாத காலத்தில் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். மேலும், மே மாதம் பொதுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

Related Stories: