டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் பாதுகாவலருக்கு ஒவ்வாமை : 52 பேருக்கு பக்கவிளைவால் தீவிர கண்காணிப்பு

புதுடெல்லி : டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் பாதுகாவலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 52 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதால் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.நாடு முழுவதும் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பூசி முதற்கட்ட இயக்கம்  தொடங்கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் முன்களப் பணியாளர்களுக்கு  போடப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நேற்று மட்டும்  1,91,181 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தேசிய தலைநகர் டெல்லியில்  மட்டும் மொத்தம் நிர்ணயிக்கப்பட்ட 8,100 பேரில்  4,319 சுகாதார  ஊழியர்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டது.

டெல்லி எய்ம்ஸில் போடப்பட்ட தடுப்பூசிகள்  யாவும், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும்.

இந்நிலையில்,  மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வௌியிட்ட அறிவிப்பில், தடுப்பூசி  போடப்பட்ட எந்தவொரு  மருத்துவமனையிலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களுக்கு பாதிப்பு  ஏற்படவில்லை என்று தெரிவித்தது. ஆனால், டெல்லியின் தெற்கு மற்றும்  தென்மேற்கு மாவட்டங்களில் தலா 11 பேருக்கும், மேற்கு டெல்லி மற்றும்  கிழக்கு டெல்லி தலா ஆறு பேருக்கும், தென்கிழக்கு மாவட்டம் மற்றும்  புதுடெல்லி ஆகிய இடங்களில் தலா ஐந்து போருக்கும், வடமேற்கு டெல்லி நான்கு  பேருக்கும், மத்திய  டெல்லி இரண்டு மற்றும் வடக்கு டெல்லி ஒருவருக்கும் தடுப்பூசி போட்ட பின்னர்  சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) தடுப்பூசி போட்டுக் கொண்ட 22 வயது  எய்ம்சின் பாதுகாப்புக் காவலர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஆனால், அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தடுப்பூசி போட்ட பின்னர், தலைவலி, சொறி, சுவாசக்  கோளாறு மற்றும் டாக்ரிக்கார்டியா ஆகிய பிரச்னைகளை சந்தித்துள்ளார். தொடர்ந்து அவர் தற்போது ஐ.சி.யுவில் இருந்தபோதும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று  மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும், டெல்லியில் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 52 பேருக்கு சிரமங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>