×

பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையிலும் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழி கழிவுகள்: கடுமையான நடவடிக்கை இல்லையா?

செங்கோட்டை: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையிலும் தமிழகத்திற்கு கேரளாவில் இருந்து கோழி கழிவுகளை லாரிகளில் ஏற்றி அனுப்புவது தொடர்கிறது. இதனால் தமிழகத்திலும் தொற்று பரவும் அபாயம் தலைதூக்கியுள்ளது. தொடர்ந்து கழிவுகள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளதால், தடுக்க கடுமையான சட்டங்கள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக - கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை, புளியரை வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில்  இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன. சமீபகாலமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் சரக்கு வாகனங்களில் அம்மாநிலத்தில் இருந்து மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டிச் செல்லும் நிலை அதிகரித்து உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் குறையாத நிலையில், பறவை காய்ச்சல் கேரளாவில் பரவி வருகிறது. இதனால் தமிழக- கேரள எல்லையான புளியரையில் கொரோனா தடுப்பு சுகாதார துறை சோதனை சாவடியும், பறவை காய்ச்சல் தடுப்பு கால்நடைத்துறை சோதனை சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் காரணமாக   கோழி தீவனங்கள், பறவை இனங்கள், முட்டை போன்றவற்றை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வர தடை செய்யப்பட்டது. கடந்த 10ம் தேதி கேரளாவிலிருந்து வந்த 3 லாரிகளை கால்நடை துறை அதிகாரிகள்  சோதனையிட்டனர் அதில் 2 லாரிகளில் மீன் கழிவுகளும், ஒரு லாரியில் கோழி கழிவுகளும் இருந்தது தெரியவந்தது. இந்த லாரிகளை  கால்நடைத்துறை அதிகாரிகள்  திருப்பி கேரளாவுக்கே செல்லுமாறு திருப்பி அனுப்பினர். அரசு தொற்று நோய் தடுப்புக்கு பணியாளர்களை அமர்த்தியும் இதுபோன்ற கழிவு லாரிகள் எந்த அடிப்படையில் தமிழகத்திற்கு வருகிறது என்பது புதிராக உள்ளது.

தற்போதும்  புளியரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் நள்ளிரவு  நேரங்களில் கழிவு லாரிகள் துர்நாற்றத்துடன்  தமிழகத்திற்குள் வேகமாக செல்வதாக   குற்றம்சாட்டுகின்றனர். தற்போது கழிவு லாரிகள் பிடிபட்டால்  தமிழக அரசு அபராதம்  விதிக்கிறது. இதனை கட்டி விட்டு தப்பி விடுகின்றனர். மாறாக, அந்த வாகனத்தின் உரிமம்  ரத்து செய்யப்பட்டால் மட்டுமே இந்த தவறு மீண்டும் நடக்காது. தமிழகத்தை நோய் பரப்பும் மையமாக மாற்றுவதை தடுக்கவும், பொதுமக்களை பாதுகாக்கவும், மண், நீர் ஆகியவற்றை பாதுகாக்கவும் அரசு  இனி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து செங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஆபத்து காத்தான் கூறியதாவது:  கேரௗ கழிவு லாரிகள் திரும்பத் திரும்ப வருவதற்கு முதன்மையான காரணம், வாகன தணிக்கை முழுமையாக இல்லை. மேற்கூரையுடன் மூடிய நிலையில் உள்ள வாகனத்தை கொண்டு கழிவுகள், போதை பொருட்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து விடுகின்றனர். மாநில எல்லையில் இருந்து தற்போதுள்ள தமிழக காவல் துறை சோதனை சாவடி 5 கிமீ தூரம் உள்ளது.

தற்போது கொரோனா பரவல் காரணமாக சுகாதாரத் துறையும், காவல் துறையும் இணைந்து ஒரு தற்காலிக சோதனைச் சாவடியை தமிழக எல்லையில் அமைத்துள்ளன. இதன் காரணமாக காவல்துறை சோதனை சாவடி சாவடியில் காவலர்கள் பணியில் யாரும் இல்லை. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா, பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழகத்தின் எல்லைப்பகுதியான கன்னியாகுமரி மாவட்ட எல்லையை தமிழக அரசு பலப்படுத்தி உள்ளது. ஆனால் புளியரை வழி தமிழக எல்லை மட்டும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது, இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கழிவு லாரிகள் தமிழக- கேரள எல்லை புளியரை வழியாக தமிழகத்திற்குள்   வருகின்றன. இந்த கழிவுகள் மூலம் பலவிதமான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் எல்லை பகுதியான செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்படும்  கழிவுகளால் பல்வேறு தோற்று நோய்கள் உருவாகின்றது. மேலும் நிலம் பாழ்படுகிறது. விவசாய நிலங்களின் விளைச்சல் குறைகிறது. இதனை தடுக்க  தமிழக அரசு கடுமையான சட்டங்களை பிறப்பித்து கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இம்மாதிரியான கழிவுகள் தமிழகம் வருவது தடுக்கப்படும், என்றார்.

தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்க மாநில துணை தலைவர் சிதம்பரம் கூறியதாவது: கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் உருவாகிறது. சோதனைச் சாவடியை கடந்து கழிவுகள் எப்படி ஊருக்குள் கொண்டு வரப்படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது. புளியரை சோதனை சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழகத்தில்் இருந்து  கேரளாவிற்கு பூ, பால், காய்கறி, கட்டுமானக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அங்கிருந்து சட்டவிரோதமாக கோழி மற்றும் மருத்துவ கழிவுகள் வருவது  வேதனையளிக்கிறது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனையிட புளியரை பகுதியில் காவல்துறை சோதனை சாவடியும், கேரள மாநில எல்லையை ஒட்டிய எஸ் வளைவு அருகே வனத்துறை சோதனை சாவடியும் உள்ளது.

இத்தனை சோதனை சாவடிகளையும் கடந்து, கேரள மாநிலத்தில் இருந்து இறைச்சி, கோழி  கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் எப்படி இங்கு வந்து சேருகின்றன என்ற கேள்வி எழுகிறது. கேரள கழிவுகள் தென்காசி மாவட்டத்தில்  கொட்டப்படுவது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது சங்கத்தின் சார்பாக மதுரையில் வழக்கு தாக்கல் செய்தேன். வழக்கு தொடங்கிய நேரத்தில் கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து அதில் கழிவுகள் கொண்டு வந்த 30 லாரிகளுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து  கேரளாவுக்கு   செல்லவும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரவும்  அனுமதி தடை விதித்துள்ள பொருள்கள் குறித்து  அறிவிப்பு பலகை ஒன்று நீதிமன்ற அனுமதியுடன் விழிப்புணர்வுக்காக வைக்கப்பட்டது. ஆனால்  இந்த அறிவிப்பு பலகை தற்போது சமூக விரோதிகளால் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கழிவுகள் தமிழகத்திற்கு  வந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு இந்த தென்காசி மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும். தற்போது உலக நாடுகளில் பல்வேறு  தொற்று நோய்கள் பரவி வரும் சூழ்நிலையில் இந்த மருத்துவ கழிவுகளால் தங்களுக்கு எந்த நோய் வருமோ என்ற அச்சத்துடனே தென்காசி மாவட்ட  மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கழிவுகளை கொண்டு வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேடும், சுற்றுச்சூழலை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும், என்றார். சோதனைச் சாவடி பெயருக்கு இயங்காமல், காவல்துறை சோதனைச்சாவடியில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அதிகாரிகளும் போலீஸ் சோதனை சாவடிக்கு  அடிக்கடி சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஒரே சமயத்தில் 4, 5 வாகனங்கள் இரண்டு புறமும் இருந்து வரும் போது குறைந்த எண்ணிக்கையில் உள்ள போலீசாரால்  வாகனங்களை சரியாக சோதனை செய்ய முடிவதில்லை.

எனவே இங்கு காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலும் கழிவு லாரிகள் இரவு நேரங்களில் தான் நுழைந்து விடுகின்றன. இந்த சமயத்தில் போலீசார் கூடுதல் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் கழிவுகள் தமிழகம் வருவது தடுக்கப்படும். இதை உறுதி செய்ய வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்தான் பொறுப்பு
தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் கலு சிவலிங்கம் கூறியதாவது: தற்போது புளியரை சோதனைச் சாவடியில் எங்களது துறை சார்பில் 6 பேர் பணி செய்து வருகிறோம். வெளி மாநிலத்தில் இருந்து வரும் கொரோனா  தொற்று நோயாளிகளை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் பயணிகள் அனைவரையும் முழுமையாக போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை செய்கிறோம்.

கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், இதர கழிவு வாகனங்கள் மூலம் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால்  கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வடுகிறோம். தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருவதால்  கால்நடை துறை சார்பில்  புளியரையில் முகாம் அமைக்கப்பட்டு  அங்கு கேரளாவில் இருந்து வாகனங்கள்  கண்காணிக்கப்பட்டு   கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. பறவை, கோழி கழிவுகள் போன்றவற்றை கேரளாவுக்கு திரும்ப அனுப்பி விடுகின்றனர். கேரளாவில் இருந்து வரும் கழிவு வாகனங்களை புளியரையில் தடுத்து நிறுத்தி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கிறோம். அந்தக் கழிவுகள் குறித்தும், லாரிகள் குறித்தும் அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Tags : spread ,Kerala ,Tamil Nadu , Bird flu, in Kerala, Tamil Nadu, poultry waste
× RELATED பஸ்சில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது