×

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் இழப்பீடு வழங்காமல் இடிக்கப்படும் கட்டிடங்கள்: வேதனையில் வியாபாரிகள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில், நகராட்சியாக மாற்றப்பட்டு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், முக்கிய பண்டிகை காலங்கள் மற்றும் காலை மாலை வேளைகளில் நாகர்கோவில் நகர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சாலை வசதி கடந்த காலத்தில் இருந்து பெரும் மாற்றம் அடையவில்லை. ஆனால் வாகனப்பெருக்கம் அதிகரிப்பால், நகர பகுதியில் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகனங்கள் நிறுத்த போதிய பார்க்கிங் வசதியும் இல்லாத நிலையும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

 இதனை கருத்தில் கொண்டு அடிப்படை கட்டமைப்பான சாலை வசதியை மேம்படுத்த நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பெரும் முயற்சி எடுத்துவருகிறது. நாகர்கோவிலின் முக்கிய ஜங்ஷன்களில் ஒன்றான வேப்பமூடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த டாக்சி ஸ்டாண்டை அப்போதைய ஆணையர் சரவணகுமார் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் பேசி மாற்று இடம் கொடுத்துவிட்டு அகற்றினார். அடுத்தகட்டமாக வேப்பமூடு பகுதியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்க் அகற்றப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான மருத்துவமனையும் அகற்றப்பட்டது. மேலும் வடசேரி ஜங்ஷனில் சாலை விரிவாக்கத்திற்காக மாநகராட்சிக்குச் சொந்தமான 93 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

 பார்க்கிங் வசதி இல்லாத சுமார் 46 வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அரசு நிலங்கள் இல்லாத இடத்தில் சாலைகளை நேர்படுத்த தனியாரிடம் இடம் பெற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்த கடைகளின் முன் பக்கங்கள் பார்க்கிங் வசதிக்காக சுமார் 15 அடிவரை இடிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்த பஸ் நிறுத்தத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதற்காக கலெக்டர் அலுவலக காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு, பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது.

கோட்டாறு ரயில் நிலையம் செல்லும் சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆக்ரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மேலும் கடை உரிமையாளர்கள் கடைகளை இடித்து, மாநகராட்சி அளவீடு செய்ததுபோல் கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். இதனால் சுமார் 3 அடி முதல் 5 அடி வரை சாலை விரிவடைந்துள்ளது. கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் கோயில் ஜங்ஷன் வரை உள்ள சாலை 34 அடியாக இருந்தது. இதை விரிவுபடுத்தி இருவழிபாதையாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி சாலை ஓரம் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. பட்டா நிலங்கள் வைத்திருப்போரிடமும் பேசி நிலம் எடுக்கப்பட்டது. ஒரு கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான கட்டிடங்கள், கோயில் நிர்வாகத்தின் அனுமதியுடன் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பு இருந்ததை விட தற்போது சாலை விரிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து சவேரியார் கோயில் ஜங்ஷன் முதல் செட்டிகுளம் வரை உள்ள சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக சாலையோரம் இருந்து கடைகள், வீடுகள் அளவீடு செய்து சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
 
 இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் ஆணையர் சரவணகுமார் மாற்றப்பட்டார். அதற்குபிறகு புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் ஆஷாஅஜித்தும், சாலை விரிவாக்க பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.  இந்த பணியால் வணிகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தட்டும், அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எடுக்கப்படும் நிலத்திற்கு உண்டான இழப்பீடு தொகையை மாநகராட்சி நிர்வாகம் வணிகர்களுக்கு வழங்கவேண்டும் என வியாபாரிகள் ஆணையர் சரவணகுமார் இருந்த காலத்தில் இருந்தே தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கலெக்டர், மாநகராட்சி ஆணையர், முதல்வருக்கும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து சாலைகள் விரிவாக்க பணிக்கும், பொதுமக்கள், வணிகர்களை மிரட்டியே அவர்களின் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது என வணிகர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன் கூறியதாவது: சாலை விரிவாக்க  திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு உரிய அறிவிப்பு செய்து, திட்டத்திற்கான நிதி முதலில் ஒதுக்கீடு செய்யவேண்டும்.

பின்னர் தேவைப்படும் நிலத்தின் உரிமையாளருக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு, இழப்பீடு வழங்கியபின்னர் அந்த நிலத்தை எடுக்கவேண்டும் என்று சட்டம் உள்ளது. இதில் எந்த சட்டத்தையும் பின்பற்றாமல் மாநகராட்சி நிர்வாகம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டியே கட்டிடங்களை இடித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வணிர்கள், பொதுமக்களுக்கு பல வகையில் மாநகராட்சி நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருகிறது. குறிப்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் பிளான் படி கட்டிடம் கட்டவில்லை என கூறி கட்டிடத்தை செயல்படுத்த முடியாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேசியநெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகளை தேசிய ெநடுஞ்சாலையத்துறை ஆணையம்தான் செய்யவேண்டும்.
 மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இணைப்பு சாலையில் முதலில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுதான் சாலை இருந்தது.

 பின்னர் பஸ் செல்லும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவுப்படுத்தும்போது எடுக்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது. இதுபோல் கேரளாவில் நான்குவழிசாலைக்கு நிலம் எடுக்கும்போது பல மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டது. அதே சாலைதான் நாகர்கோவிலிலும் உள்ளது. ஆனால் இங்கு இழப்பீடு வழங்காமல் மிரட்டப்பட்டே நிலம் எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சி என்று அறிவித்தவுடன் மாநகராட்சி முழுமை திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம் ஒரு சர்வதிகார போக்கில் செயல்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்திற்கு வணிகர்கள் எதிர்ப்பு இல்லை. சாலையை விரிப்படுத்தும்போது, எடுக்கப்படும் நிலத்திற்கு உண்டான உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. எடுத்த நிலத்திற்கு பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் மாநகராட்சி நிர்வாகம் கண்டிப்பாக இழப்பீடு வழங்கவேண்டும் என்றார்.

 இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: மாநகர பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு முறையாக பார்க்கிங் வசதி இருக்கவேண்டும். சாலையோரம் இருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் வர்த்தக நிறுவனங்களின் இடத்தில் நிற்கும் வகையில் இடம் ஒதுக்கி கட்டிடங்கள் கட்டவேண்டும். அந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோட்டார் பகுதியில் உள்ள பெரும்பான்மையான கடைகள் ஒரு விநாயகர் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான நிலம். இந்த நிலத்தில் உள்ள கட்டிடங்கள் மாற்ற கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்பெயரில் தான் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் கடை, வீடு சீல்
 கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் கோயில் ஜங்ஷன் வரை சாலை விரிப்படுத்தும்போது எதிர்ப்பு தெரிவித்த ஒருவரின் கடை சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் சாலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வகையில் செட்டிதெருவில் 10 வீடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம், நெல்லை செல்லும் பஸ்கள் காசிவிஸ்வநாதர் கோயில் அருகே சென்று திரும்பி செல்லும். இந்த திரும்பும் பகுதியில் இருபுறமும் உள்ள ஒவ்வொரு கடைகளை சாலை விரிவாக்கத்திற்கு விட்டுதருமாறு அப்போது இருந்த ஆணையர் சரவணகுமார் கோயில் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு கோயில் நிர்வாகம் எழுத்துபூர்வமாக எழுதிதருமாறு கேட்டுள்ளது. ஆனால் ஆணையர் எழுத்துபூர்வமாக கொடுக்காமல், அந்த  கடைகளுக்கு சீல் வைத்தார். சீல் நடவடிக்கையால் கடந்த ஒன்றரை வருடமாக இந்த கடைகள், வீடுகள் பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில் செட்டிகுளம் ஜங்ஷனில் உள்ள வணிக வளாக உரிமையாளர்கள் நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு வருவதால் தற்போதுள்ள ஆணையர் ஆஷாஅஜித் அந்த வணிகவளாகத்தில் உள்ள 14 கடைகளுக்கு சீல் வைத்துள்ளார்.

வேரோடு பிடுங்கி மாற்றப்பட்ட மரங்கள்
 வடசேரி பஸ் நிலையம் முன்புள்ள சாலை விரிவுப்படுத்தும்போது அந்த பகுதியில் நின்ற மரங்களை அப்படியே வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி வடசேரி பஸ் நிலையம் அருகே ஆவின் பாலகம் முன் சாலை ஓரம் நின்ற தென்னை, பலா, வேம்பு மற்றும் மா என 6 மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அப்படியே வேரோடு பிடுங்கப்பட்டது. பின்னர் ராட்சத எந்திரம் மூலம் மரங்களை அப்படியே தூக்கி லாரியில் எற்றி புளியடி சுடுகாடு பகுதியில் மீண்டும் நடப்பட்டது.

Tags : Buildings ,area ,Nagercoil Corporation ,Merchants , Nagercoil Corporation, area, compensation, demolition, buildings
× RELATED தமிழக அரசு, பழைய கட்டிடங்களை...