×

ரூ.30 கோடி செலவில் கட்டிய புதிய கட்டிடம் முதல்வர் திறந்து வைத்தும் மூடிக்கிடக்கும் கலெக்டர் ஆபீஸ்

* சேவைகளை ஒரே இடத்தில் பெறமுடியாத மதுரை மாவட்ட மக்கள்
* கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாட்டம்

மதுரை: மதுரையில் ரூ.30 கோடி செலவில் கட்டிய புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தும் பயன்படுத்தாமல் மூடிக் கிடக்கிறது. மேலும், பழைய கட்டிடப்பகுதிகளிலும், நகரின் பிற இடங்களிலும் உள்ள அலுவலகங்களால் ஒரே இடத்தில் மக்களால் சேவையை பெற முடியவில்லை. மேலும் தற்போதுள்ள கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் இன்றி பொதுமக்கள் துயரம் தொடர்கிறது. மதுரையில் கலெக்டர் அலுவலகம் 1790ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தற்போதுள்ள கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1916ம் ஆண்டு கட்டப்பட்டது. நூறாண்டுகளை கடந்து விட்டது. எனவே, கலெக்டர் அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டவும், மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு சேவை வழங்கிடவும் வசதியாக மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே ரூ.30 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதற்கென கலெக்டர் அலுவலக வளாகத்தில் 4 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவில் 10,904 சதுர மீட்டரில் கட்டிடம் கட்ட முதல் கட்டமாக ரூ.20 கோடியே 98 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் நிதி ஒதுக்கீடு அதிகரித்து மொத்தம் ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டது. கட்டிடத்தில் தரை தளத்துடன் 4 தளங்கள் கட்டப்பட்டன. தரைதளத்தில் 3,105 ச.மீ, பரப்பளவில் 30 அறைகளும், முதல் தளம் 2,838 ச.மீ பரப்பளவில் 33 அறைகளும், 2வது தளத்தில் 2,572 ச.மீ பரப்பளவில் 25 அறைகளும், 3வது தளத்தில் 2,389 ச.மீ பரப்பளவில் 26 அறைகளும் என மொத்தம் 114 அறைகள் 10,904 ச.மீ பரப்பில் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டிடத்திற்கென பிரம்மாண்ட 2 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டிடத்தில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தனி தாசில்தார், (விமான நிலைய விரிவாக்கம்-1 மற்றும் 2) மாவட்ட தணிக்கைத்துறை அலுவலகம், சார்நிலை கருவூலகங்கள், உதவி ஆணையர் (ஆயத்தீர்வு) அலுவலகம், மாவட்ட கருவூலகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் அமைகிறது.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (கணக்கு, விவசாயம், நிலம், சத்துணவு, சிறுசேமிப்பு), இணை இயக்குநர், கள்ளர் சீரமைப்பு அலுவலகம், அரசு கேபிள் டிவி தாசில்தார், நில உச்சவரம்பு, முத்திரைத்தாள், எல்காட் கிளை மேலாளர் அலுவலகம், அகதிகள் முகாம் தாசில்தார், உதவி இயக்குநர், (பேரூராட்சிகள்), மாவட்ட மேலாளர் (தாட்கோ), வருவாய் நீதிமன்றம், ஆணையாளர் அலுவலகம் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையம்) அமைகிறது. இத்துடன், தேர்தல் பிரிவு, தாசில்தார், மாவட்ட தகவலியல் மையம், மண்டல கருவூலக இயக்குநர், பேரிடர் மேலாண்மை தாசில்தார் அலுவலகம், ஆகிய 26 அலுவலகங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 26 அலுவலகங்கள் தற்போது உள்ள கலெக்டர் அலுவலகத்தில் சிறிய அறைகளில் இயங்கி வருகின்றன. சில அலுவலகங்கள் நகருக்குள் வேறு இடங்களிலும் இயங்குகின்றன. இந்த அலுவலகங்களைத் தேடி மக்கள் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிவதும் தடுக்கப்பட்டு, ஒரே இடத்தில் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வசதிக்காகவே இந்த கலெக்டர் அலுவலக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒன்றரை மாதங்களுக்கும் முன்னதாக திறந்து வைத்தார். ஆனால் இக்கட்டிடத்தை தற்போது பயன்படுத்தாமல் மூடி வைத்திருக்கின்றனர்.

பழைய கட்டிடப்பகுதிகளிலும், நகரின் பிற இடங்களிலும் உள்ள அலுவலகங்களால் ஒரே இடத்தில் மக்களால் சேவையை பெற முடியும் எனத்தெரிவித்தே இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் பழையபடியே மக்கள் அலைந்து திரிந்து தவித்து வருகின்றனர். மேலும் தற்போதுள்ள கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. திறந்த வெளிகளையே பொதுமக்கள் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தால்தான், இங்குள்ள கழிப்பறைகளும் பயன்பாட்டிற்கு வரும். எனவே இந்த புதிய கட்டிடத்தை மாவட்ட நிர்வாகமும், அரசும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்கள் துயரம் போக்க வேண்டியது அவசியம்.

பழைய கட்டிடத்தையும் பாதுகாக்க வேண்டும்
சமூக ஆர்வலர் கணேசன் கூறும்போது, ‘‘தற்போதுள்ள கல்கட்டிடத்தில் இயங்கும் கலெக்டர் அலுவலகமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். மாடி வைத்த கோட்டை போல் அமைந்துள்ளது. இங்குள்ள மாடிக்கு செல்வதற்கு 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேக்குமர பட்டிக்கட்டுகள் 100 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறு கீறல் கூட இல்லாமல் கல்லாக உள்ளது. மதுரையுடன் திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் இணைந்து இருந்த காலத்திலும் இந்த கட்டிடத்தில் தான் கலெக்டர் அலுவலகம் இயங்கியது. புது கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு தற்போதுள்ள கலெக்டர் அலுவலக கட்டிடம் காலியாகும். இந்த பழமை கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கி புனரமைத்து தொன்மை மதுரை குறித்த பழமை கண்காட்சி நிலையமாக மாற்ற வேண்டும்’’ என்றார்.

தொடர் தாமதம்
மதுரை ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த கலெக்டர் அலுவலக கட்டிடமானது 2018 ஏப்ரலில் அடிக்கல் நாட்டி பணி தொடங்கப்பட்டது. 4 தளங்களுடன் வெள்ளை மாளிகை போன்ற தோற்றத்துடன் கலைஅம்சங்களுடன் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டது. 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்ற நிலையில், திட்டமிட்டபடி பணி முடிக்கப்படவில்லை. ஏற்கனவே திட்டமிட்டதற்கும் அதிகமாக 1,800 சதுர மீட்டருக்கு கட்டிடம் அதிகரிக்கப்பட்டு, மதிப்பீடும் உயர்ந்தது. மதிப்பீடு ரூ. 30 கோடி வரை அதிகரித்து, கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கும் காலதாமதம் ஆனது. பல்வேறு தாமதங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தும், அதிகாரிகள் பயன்படுத்தாமல் பூட்டி வைத்திருப்பது முறையல்ல. விரைந்து இதனை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்’’ என்றார்.

மந்தமாக நடக்கிறது
மதுரை திமுக எம்எல்ஏ, டாக்டர் சரவணன் கூறும்போது, ‘‘ஏற்கனவே உள்ள கலெக்டர் அலுவலக பழமை கட்டிடம் மதுரைக்கு பெருமை சேர்ப்பதாகும். நிர்வாகத் துறைகள் அதிகரிப்பால், கடுதல் இடம் தேவை கருதி, கட்டிடம் கட்டலாம். ஆனால், அதனை விரைந்து திறப்பது முக்கியம். ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல பணிகள் மதுரையில் மிக மந்தமாக நடந்து வருகிறது. தலைவரான கலெக்டர் நடத்த வேண்டிய ‘பீசா’ என்ற மேம்பாட்டு மீட்டிங்கை, துணை தவைரான எம்பி, வெங்கடேசனை கொண்டு வரும் 18ம் தேதி தமிழ்சங்க கட்டிடத்தில் நடத்த இருக்கிறோம். இதுபோன்ற வேலைகளை துரிதாக செய்து முடிக்க வலியுறுத்தப்படும்’’ என்றார்.

Tags : building ,Chief Minister ,Collector , Rs 30 crore, new building, CM, Closed, Collector Office
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...