×

‘ஜாப் ஆர்டர்’ இன்றி தள்ளாடும் குறுந்தொழில் நிறுவனங்கள்: வேலையிழந்து தவிக்கும் பல லட்சம் தொழிலாளர்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொழில்துறை. அதிலும் குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இதன்மூலம், 4 லட்சத்துக்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தொழில் நிறுவனங்களுக்கு கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக கடும் சோதனை ஏற்பட்டு வருகிறது. துவக்க காலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இத்தொழிலுக்கு பெரும் நெருக்கடி கொடுத்தது. அதன்பிறகு மின்கட்டண உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, 2016ம் ஆண்டு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, 2017ம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி வரி என அடி மேல் அடி விழுந்துகொண்ேட இருப்பதால், மீள முடியாத அளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரும் நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் இக்குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பது பெரும் சுமையாகி விட்டது. இந்த கடுமையான வரி விதிப்பு காரணமாக கிட்டத்தட்ட 45 சதவீத குறுந்தொழில் நிறுவனங்களால் இயங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், வெட்கிரைண்டர், பவுண்டரி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பெரும் நிறுவனங்களுக்கு, உதிரிபாகங்கள் செய்துகொடுக்க, குறுந்தொழில் நிறுவனங்கள் ஜாப் ஆர்டர் பெறுகின்றன. இந்த ஜாப் ஆர்டர்களை செய்து கொடுத்த பிறகு, அதற்கான பில் தொகை உடனடியாக கிடைப்பதில்லை. அந்த தொகை வருவதற்கு கிட்டத்தட்ட 3 மாதம் ஆகி விடுகிறது.

ஆனால், 18 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும். அதனால், பில்தொகை வராமலேயே, கையில் இருந்து பணம் போட்டு, ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய நிைலக்கு குறுந்தொழில் முனைவோர் தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற தொடர் நெருக்கடி காரணமாக, குறுந்தொழில் முனைவோர் பலர், தங்களது ஆலைகளை பூட்டிவிட்டு, வேறு தொழிலுக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டுவிட்டது. உச்சக்கட்டமாக, கொரோனா ஊரடங்கு இத்துறையை முற்றிலுமாக புரட்டிப்போட்டு விட்டது. இதன்காரணமாக, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டாலும், ஜாப் ஆர்டர் கிடைக்காமல், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆலையை திறந்து வைத்திருந்தாலும் ஆர்டர் கிடைக்கவில்லை. வேலைக்கு ஆட்கள் கிடைக்காமலும் ெபரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை பீளமேடு, ஆவாரம்பாளையம், கணபதி, வேலாண்டிபாளையம், சரவணம்பட்டி, சுந்தராபுரம், சிட்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பரிதாப நிலை தொடர்கிறது. அடுத்தடுத்து சரிவு ஏற்பட்டு வருவதால், கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

இதுபற்றி தமிழக கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: மூலப்பொருள் விலைஉயர்வை குறைக்கவேண்டும், மின்கட்டண உயர்வை ரத்து ெசய்ய வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால், மூலப்பொருள் விலை உயர்வு தடுக்கப்படவில்லை. மின்கட்டண உயர்வும் ரத்து செய்யப்படவில்லை. இதனால், குறுந்தொழில்துறையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அபரிமிதமாக உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இதையும், மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

கொரோனா கால ஊரடங்கை கருத்தில்கொண்டு, குறுந்தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு தேவையான அளவு வட்டியில்லா கடனுதவி அளிக்கவேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கை விடுத்தோம். இதையும், மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. ஒரு பக்கம் மத்திய-மாநில அரசுகளின் பாராமுகம், இன்னொரு பக்கம் ஜாப்ஆர்டர் இழப்பு என இரண்டும் ஒருசேர தாக்குவதால், இத்துறையில் உள்ள குறுந்தொழில் முனைவோரால் எதுவும் செய்யமுடியாத நிைல உள்ளது. தொழில்களை தொடர்ந்து நடத்த முடியாமல் பலர், ஆலைகளை பூட்டிவிட்டு, இயந்திரங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மூலப்பொருள் விலை உயர்வை அடியோடு ரத்து செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பையும் ரத்துசெய்ய வேண்டும். அந்தந்த ஆலைகளின் செயல்திறனுக்கு ஏற்ப, ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அவசரகால கடனுதவி அளிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறுந்தொழில் நிறுவனங்களை பாதுகாக்க முடியும். குறுந்தொழில் நிறுவனங்கள் இல்லையேல், பெரிய நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர் செய்துகொடுக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக பெரிய நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்படும். அரசுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் பாலமாக இருக்கும் குறுந்தொழில் துறையை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

அரசுத்துறை ஆர்டர் தேவை
தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, ரயில்வேதுறை, பஞ்சாலை துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட அரசுத்துறைகளை சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தடையின்றி ஜாப் ஆர்டர் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதை தொடர்ச்சியாக செய்யும் பட்சத்தில், அரசுத்துறை நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலையில் தரமான உதிரிபாகங்கள் கிடைக்கும். அத்துடன், குறுந்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

தனி கமிட்டி அமைக்க யோசனை
மூலப்பொருள் விலை உயர்வை தடுக்க, குறுந்தொழில்முனைவோர் சங்க நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள், மூலப்பொருள் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கமிட்டி அமைக்கவேண்டும். இந்த கமிட்டி மூலமே மூலப்பொருள் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இப்படி செய்தால், விலை உயர்வை தடுப்பதுடன், நியாயமான விலையில் மூலப்பொருள் கிைடக்கும்.

குறுந்தொழிற்பேட்டை
கோவை மாநகரில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் ேமற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. அன்று, ஒதுக்குப்புறமான இடத்தில் துவக்கப்பட்ட இந்நிறுவனங்களை சுற்றி, கடந்த 20 ஆண்டுகளில் பல ஆயிரம் குடியிருப்புகள் உருவாகி விட்டன. அதனால், தற்போது, இந்நிறுவனங்கள் குடியிருப்புகளுக்கு நடுவே இருப்பதுபோல் காட்சி தருகின்றன. எனவே, குறுந்தொழில் நிறுவனங்களை நகருக்கு வெளியே கொண்டுசென்று, அரசு சார்பில் தனி தொழிற்பேட்ைட அமைத்து கொடுக்க வேண்டும்.


Tags : businesses ,Millions , ‘Job Order’, small business, companies, millions of workers
× RELATED உலகம் முழுவதும் ரமலான் நோன்பு தொடக்கம்