கனமழை, கொரோனா காரணமாக டெல்டாவில் களையிழந்தது காணும் பொங்கல் பண்டிகை

திருவாரூர்: டெல்டா மாவட்டத்தில் மழை மற்றும் கொரோனா காரணமாக காணும் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் இந்த பண்டிகைக்காக வெளியூர்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி அங்கு தாய் தந்தை மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக பொங்கலிட்டு கொண்டாடுவர். இந்நிலையில் நடப்பாண்டில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக பொதுமக்கள் வழக்கமாக மேற்கொள்ளும் வீடுகளை சுத்தம் செய்யும் பணி, வர்ணம் தீட்டுவது உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் இந்த பொங்கல் திருநாளையொட்டி சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சூரியன் தெரியாததன் காரணமாக கடந்த 14ம் தேதி பொங்கல் விழா களை இழந்து காணப்பட்டது.

மேலும் நேற்று முன்தினம் மாட்டு பொங்கலையொட்டி இந்த மழை தொடர்ந்த நிலையில் கடும் குளிர் காரணமாக ஆடு, மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பாட்ட கூட முடியாமல் பெயரளவில் இந்த மாட்டு பொங்கலானது நடைபெற்றது. இந்நிலையில் ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி வீட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் கூட்டாஞ்சோறு கட்டிக்கொண்டு கோயில்களுக்கு சென்று அங்கு ஆடி, பாடி, கும்மியடித்து கொண்டாடும் நிலையில் நடப்பாண்டில் கொரோனா தாக்கம் காரணமாக கோயில்களுக்குள் ஆடிப்பாடி, கும்மியடிக்க அனுமதி அளிக்கப்படாததால் நேற்று கோயில்கள் திறந்திருந்த நிலையிலும், பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

மேலும் இந்த திருவிழாவையொட்டி டெல்டா பகுதியில் உள்ள கிராமப்புறங்கள் உட்பட நகர்ப்புறங்களிலும் ஆடல், பாடல் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவை வழக்கமாக நடைபெறும் நிலையில் கொரோனா என்ற பெயரில் இந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறாததன் காரணமாக இந்த பொங்கல் விழாவானது களையிழந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர், நண்பர்களை கண்டு வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. மேலும் குடும்பத்துடன் பொதுமக்கள் சுற்றுலாத்தலங்களுக்கும், பொழுது போக்கு இடங்களுக்கும் இந்த நாளில் சென்று வருவது வழக்கம்.

திருச்சியில் காணும் பொங்கல் அன்று முக்கொம்பு, கல்லணை, வண்ணத்துப்பூச்சி பூங்கா போன்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பர். ஆனால் இந்தாண்டு கொரோனா ஊரடங்கையடுத்து மாவட்ட நிர்வாகம் பல கட்டுப்பாடுககைள விதித்துள்ளதால் முக்கொம்பு, கல்லணை போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்தது. இங்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை.

Related Stories: