வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் தாமதமாகும் கால்வாய் நடைபாதை பணியால் மக்கள் கடும் அவதி

* சுடுகாட்டுக்கு சடலம் எடுத்துச்செல்ல முடியவில்லை

* ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் பல மாதங்களாக இழுத்தடித்து நடைபெறும் 2 கல்வெர்ட்டுகளை அரைகுறையாக முடித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவ்விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாநகராட்சி 2வது மண்டலம் சத்துவாச்சாரியில் ஜமாதி மலையில் இருந்து வரும் கானாறு, மக்கள் குடியிருப்புகளின் வழியாக வரும் போது கழிவுநீர் செல்லும் கானாறாக உருமாறி பகுதி-2, சத்துவாச்சாரி மந்தைவெளி, குறிஞ்சி நகர், சுடுகாடு வழியாக நிக்கல்சன் கால்வாயுடன் இணைகிறது. இக்கால்வாயின் மீது இருந்த 2 கல்வெர்ட்டுகளும் சேதமடைந்தன. இதனால் அவ்வழியாக இறந்தவர்களை கொண்டு செல்வதிலும், அவ்வழியாக காட்பாடி விருதம்பட்டு, காங்கேயநல்லூர், பிரம்மபுரம் பகுதிகளுக்கு செல்வதற்கும், விஐடி பல்கலைக்கழகத்துக்கும் சத்துவாச்சாரி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதனால் இக்கல்வெர்ட்டுகளை அகற்றிவிட்டு புதிய கல்வெர்ட்டுகள் வாகனங்கள் செல்லும் வகையில் கட்டுவதற்கு மாநகராட்சி முடிவெடுத்தது. அதோடு இக்கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் தவறி கானாற்றில் விழும் சம்பவங்களை தடுக்க தடுப்புகள் அமைக்கவும் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2 மாதங்களுக்கு முன்பு 2 கல்வெர்ட்டுகள் கட்டும் பணி தொடங்கியது. இப்பணி முடிவடைந்த நிலையில் பக்கவாட்டில் உள்ள பள்ளங்கள் மூடாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கானாற்றின் இருபுறமும் பக்கவாட்டில் போட்டிபோட்டு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அதோடு கல்வெர்ட் பணியும் தரமாக நடைபெறவில்லை என்றும், இதனால் கட்டி முடிக்கப்பட்ட கல்வெர்ட் இப்போதே ஆங்காங்கு சிதைந்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்பணி அரைகுறையாக விடப்பட்டுள்ளதால் சடலங்களை கொண்டு செல்வதிலும், காட்பாடி பகுதிகளுக்கு செல்வதிலும் தொடர்ந்து சிக்கல்களை சந்திப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம், குறிஞ்சி நகரில் இருந்து சுடுகாடு மற்றும் பாலாறு வழியாக காட்பாடி பகுதிகளுக்கு செல்லும் பாதையில் உள்ள 2 கல்வெர்ட்டுகளையும் மறுஆய்வு செய்து சீரமைத்து, அதன் பக்கவாட்டில் உள்ள பள்ளங்களை மூடி, சாலை அமைத்து போக்குவரத்துக்கு வழியேற்படுத்த வேண்டும் என்று குறிஞ்சி நகர், மந்தைவெளி, பெரிய தெருவை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories:

>