×

புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பெரம்பூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 8 மாதங்களாக எந்த ஒரு அத்தியாவசிய பணியும் சரிவர நடைபெறவில்லை. குறிப்பாக, வடசென்னையில் சாலை, கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அத்தியாவசிய பணிகள் தொடங்கப்படும் என மக்கள் நினைத்திருந்த நிலையில், போதிய ஊழியர்கள் இல்லை எனக்கூறி பல பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி, திருவிக நகர் மண்டலம், 72வது வார்டுக்கு உட்பட்ட புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 11வது தெரு, 12வது தெரு, 2வது குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக மின் வயர்கள்  மின் பெட்டிகளிலிருந்து பிரிந்து தனியாக தொங்குகின்றன. இந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படும்போதும், உயரழுத்த மின்சாரம் ஏற்படும்போதும் பொதுமக்கள் தாங்களாகவே சென்று அந்த மின் பெட்டியிலிருந்து வயர் மூலம் தங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்து ஆபத்தான முறையில் பயன்படுத்துகின்றனர்.

பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியில் பல இடங்களில் மின் வயர்கள் தாழ்வாக தொங்குவதால், குழந்தைகள் விளையாடும்போது விபத்து அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை மின்வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களது பகுதியில் கடந்த 15 ஆண்டு காலமாக மின் வயரில் பழுது ஏற்பட்டு அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தால், ‘‘மொத்தமாக மின் வயர்களை மாற்ற வேண்டும். தற்போது அதற்கு நேரமில்லை, எனக்கூறி தட்டிக்கழித்து வந்தனர்.  இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதி மக்கள் சிலர் ஒரு வீட்டிற்கு தலா 3,000 ரூபாய் வீதம் கொடுத்து தாங்களாகவே முன்வந்து வீடுகளுக்கு புதிய மின் வயர்களை மாற்றிக் கொண்டனர். வசதி இல்லாதவர்கள் வயர் மாற்ற முடியாததால் பழைய நிலையே தொடர்கிறது.

கடந்த 9 மாதத்திற்கு முன்பு இந்த மின் வயரில் மின் கசிவால் அருகில் சென்ற ஒரு சிறுவன் தூக்கி  வீசப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தாழ்வாக உள்ள மின் வயர்களை சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் மின் வாரியத்தில் புகார் அளித்தபோது, ஆட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மொத்த வயரையும் மாற்ற உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஒப்புதலுக்கு பிறகு பணி தொடங்கப்படும், என தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள மின்சார வயர்களை சரி செய்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : accident , Accident risk due to low hanging power wires in Puliyanthoppu Shastri Nagar: Unseen by the authorities
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!