ஓசூர் அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கன்டெய்னர் லாரி மோதி காட்டு யானை படுகாயம்: வனத்துறையினர் மீட்டு தீவிர சிகிச்சை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைக்கூட்டத்தில் இருந்து ஒரு ஆண் யானை மட்டும் தனியாக பிரிந்து, பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக சுற்றி திரிந்தது.  இந்த ஒற்றை யானை, ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், கடக்க முயன்றது. அப்போது, ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி சென்ற கன்டெய்னர் லாரி, யானை மீது பயங்கரமாக மோதியது. இதில் யானை வலது பின்னங்கால் மற்றும் வயிறு, தொடை பகுதியில் பலத்த அடிபட்டு, சாலையில் சுருண்டு விழுந்தது. தகவலறிந்துவந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி, 5 மணி நேரம் போராடி அதிகாலை 2 மணியளவில் கிரேன் மூலம் கன்டெய்னர் லாரியில் யானையை ஏற்றி தேன்கனிக்கோட்டை அய்யூர்காட்டில் உள்ள சாமி ஏரி என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவகுழுவினர், எக்ஸ்ரே எடுத்து யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சோலைமுத்து(34), லேசான காயத்துடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது போலீசாரும் வனத்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: