மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்கள் போலீஸ் கேன்டீனில் வழங்கப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

பெங்களூரு: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே போலீஸ் கேன்டீனில் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். பத்ராவதியில் இருந்து பெங்களூரு திரும்பிய அமித்ஷா விதானசவுதா வரவேற்பு அரங்கில் போலீஸ் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு 8.30 மணி அளவில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த பாஜ ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில் பாஜவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் குறித்து இக்கூட்டத்தில் அமித்ஷாவிடம் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. அத்துடன் பெலகாவி தொகுதி எம்பி இடைத்தேர்தல், பசவகல்யாண் மற்றும் மஸ்கி ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றிக்கான வியூகமும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதான விதான சவுதாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு மருந்து விஷயத்திலும் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதற்கு கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் சிறந்த உதாரணமாகும்.மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே போலீஸ் கேன்டீனில் வழங்கப்படும். இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மாநில முதல்வர் எடியூரப்பா சிறப்பாக செயல்படுகிறார். அதேநேரம் மத்திய அரசும் கர்நாடகத்திற்கு சில திட்டங்களை அறிவித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், எவ்வித காரணமும் இன்றி பாஜ அரசை எதிர்க்கிறது. அடுத்து வரும் பேரவை தேர்தலிலும் பாஜ பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.

Related Stories:

>