செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் உள்பட 7 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடுநிலையோடு நடக்குமா? அதிமுக மாவட்ட செயலாளர் போல் கலெக்டர் செயல்படுகிறார்

* மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை

*  திமுக குற்றச்சாட்டு

சென்னை: மாவட்ட அதிமுக செயலாளர் போல செயல்பட்டு வரும் செங்கல்பட்டு கலெக்டர் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், ஆலந்தூர் ஆகிய 7 சட்டமன்றங்களின் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவாரா என்று திமுக கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் பகிரங்கமாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் கலெக்டராக ஜான் லூயிஸ் இருந்து வருகிறார். இம்மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏக்கள் இணைந்து கலெக்டரை சந்தித்து தங்களது தொகுதி பிரச்னைகள் சம்மந்தமாக மனுக்கள் கொடுத்தோம். ஆனால் ஆளுங்கட்சிக்கு பயந்து எங்களது மனுக்களை தூக்கி கிடப்பில் போட்டுவிட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மாறாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அதே பிரச்னை குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினால் உடனே நிறைவேற்றி தருகிறார். கலெக்டர் தான் மாவட்ட தேர்தல் அலுவலராக உள்ளார். சட்டமன்றத் தேர்தலை நடுநிலையோடு நடத்துவார். இது பற்றி தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் செய்ய உள்ளோம். ஆகவே மாவட்ட அதிமுக செயலாளர் போல் செயல்படும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் லூயிசை உடனடியாக மாற்றம் செய்தால் தான் இம்மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் முறையாக நடைபெறும் நிலை ஏற்படும். இவ்வாறு தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொங்கல் விழாவில் கலெக்டர் மனைவி பங்கேற்பு

திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருப்போரூர்  தொகுதி திருவடிசூலத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில்  மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸின் மனைவி ஷர்மிளா கலந்துக்கொண்டு பொங்கல்  வைத்தார். இந்த விழாவில் அவர் அருகில் மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகம்  மற்றும் அதிமுகவினர் கலந்துக்கொண்டனர்.மாவட்ட ஆட்சியரின் மனைவி பொதுமக்களோடு  சேர்ந்து சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துக்கொண்டு இருந்தால் நாங்கள்  புகார் கூற மாட்டோம். அதிமுக மாவட்டச் செயலாளர் உடன் பொங்கல் விழாவில்  கலந்துக்கொண்டது எந்த விதத்தில் நியாயம். மாவட்ட அதிமுக செயலாளர்  ஆறுமுகத்துடன் சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியரின் மனைவி எப்படி  பங்கேற்கலாம்’’

Related Stories: