அரசை ஆதரித்தவர்களிடம் எப்படி பேச முடியும்? வேளாண் சட்ட நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு

புதுடெல்லி: விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க நியமிக்கப்பட்ட  வேளாண் நிபுணர் குழு உறுப்பினர்களை மாற்றும்படி, உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய க்கோரி 50 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.இதனிடையே, வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க பூபிந்தர் சிங் மன், பிரமோத் குமார் ஜோஷி, அசோக் குலாட்டி, அனில் கன்வாத் அடங்கிய குழுவை நியமித்தது. இவர்கள் ஏற்கனவே, மத்திய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளித்தவர்கள் என்பதால், விவசாயிகள் இந்த குழுவை புறக்கணித்தனர். இதில், பூபிந்தர் சிங் இந்த குழுவில் இருந்து தாமாக விலகி கொண்டார்.

இந்நிலையில், பாரதிய கிசான் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், ‘நிபணர் குழுவில் தற்போது இடம் பெற்றுள்ள மூவரையும் நீக்கிவிட்டு, பரஸ்பர நல்லிணக்கத்தின் அடிப்படையில் அறிக்கை அளிப்பவர்களை நியமிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு ஏற்கனவே ஆதரவு அளித்த இவர்கள் விவசாயிகளிடம் எப்படி நல்லிணக்க அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்? இவர்கள் குழுவில் தொடர்ந்து நீடிப்பது நீதி கொள்கையை மீறும் செயலாகும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: