×

கியூபா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை

ஹவானா: மனித உரிமை அத்துமீறல் புகாரின் அடிப்படையில், கியூபா மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. கியூபாவில் கடந்த 1959ல் நடந்த புரட்சியின் மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்தார். அப்போது, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை கியூபா தேசியமயமாக்கியது. இதைத் தொடர்ந்து, 1960ல் இருந்து அமெரிக்கா அதன் மீது பொருளாதார தடை விதித்து வருகிறது.அதிபர் ஒபாமாவின் ஆட்சி காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு ஏற்பட்டது. ஆனால், டிரம்ப் பதவியேற்ற பின் மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க நிதித்துறை செயலர் ஸ்டீவன் நுச்சின் வெளியிட்ட அறிக்கையில், ‘கியூபா அரசுக்கு எதிராக செயல்பட்ட ஜோஸ் டேனியல் பெரர் என்பவரை உள்துறை அமைச்சகம் கைது செய்து, அடித்து துன்புறுத்தி தனிமைச் சிறையில் அடைத்துள்ளது. அங்கு அவருக்கு மருத்துவ உதவிகள் மறுக்கப்படுகின்றன.

 இப்படி மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ள கியூபா உள்துறை அமைச்சர், அவரது 4 மகன்கள் மீது மேக்னிட்ஸ்கி உலக மனித உரிமை மீறல் சட்டத்தின் கீழ் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது,” என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் இருக்கும் அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதே போல, அமெரிக்க நிறுவனங்களுடன் அவர்கள் எவ்வித வர்த்தக பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியாது, எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : US ,Cuba , New US embargo on Cuba
× RELATED எல்லை பதற்றத்தை பயன்படுத்தி...