கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் இருக்கும் அச்சம் போகப்போக சரியாகி விடும்: முதல்வர் எடப்பாடி பேட்டி

சென்னை: பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பு வருமென்ற அச்சம்  கொஞ்சம் இருக்கும். போகப்போக அது சரியாகி விடும் என்று முதல்வர் எடப்பாடி  கூறினார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை நேற்று தொடங்கி வைத்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நமது பிரதமர் மோடி விடாமுயற்சி காரணமாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதை இன்றைய தினம் இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணித்து இருக்கிறார்கள். முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டமாக, இந்த தடுப்பூசியை போடும் நடவடிக்கையை பிரதமர் இன்றையதினம் டெல்லியில் தொடங்கி வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தில், மதுரையில் தடுப்பூசி போடும் பணி இன்றையதினம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி முதல் முறை போடப்பட்டு 28 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறை போடப்படும்.அதன் பின் 42 நாட்கள் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதன்பிறகு இந்த நோய் தாக்குதலில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். தமிழகத்திற்கு 5,36,500 கோவிஷீல்டும், 20,000 கோவாக்ஷின் என மொத்தம் 5,56,500 எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகளில் பல தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, இதில் அரசு, தனியார் என்று பார்க்கக் கூடாது.

அரசு எவ்வளவுதான் சொன்னாலும், மக்களுக்கு இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பு வருமென்ற பயம் இருக்கிறதே, அந்த பயத்தை போக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்கிறீர்கள். முதலில் அவ்வாறு இருக்கத்தான் செய்யும். முதலில் கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும், போகப் போக அது சரியாகி விடும். கொரோனா வைரஸ் தடுப்பு முன்கள பணியில் ஈடுபட்டுள்ள 12 ஆயிரம் பேர்களை படிப்படியாக நிரந்தரம் செய்வதற்கு அரசு பரிசீலிக்கும். நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 650க்கும் குறைவாக இருக்கிறது, இறப்பும் குறைந்திருக்கிறது. ஆனால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* முதல்வர் தடுப்பூசி போடுவாரா?

நீங்கள் (முதல்வர்) தடுப்பூசி எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டபோது, நிச்சயமாக அனைவரும் எடுக்க வேண்டும். இந்திய நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத்தான் இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கின்றார்கள். கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு பணியில்  ஈடுபட்டுள்ளவர்களுக்கு எளிதாக தொற்று ஏற்பட்டுவிடுமென்பதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.

Related Stories:

>