கோவின் செயலியில் கோளாறு: கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தாமதம்

சென்னை: கோவின் செயலியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நேற்று தடுப்பூசி வழங்கும் பணி தாமதமானது. இது வரும் நாட்களில் சரி செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தமிழகத்தில் நேற்று 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி தொடங்கியது. ஒரு மையத்தில் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல் நாளான நேற்று கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தாமதம் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்நாள் என்பதால் இந்த தாமதம் ஆனதாகவும், இன்று இது சரி செய்யப்பட்டு விடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது: தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல் நாளான இன்று (நேற்று) காலை 11.30 மணிக்கு தான் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

இதை தவிர்த்து சில மாவட்டங்களில் ஏற்பட்ட இணையதள கோளாறு காரணமாக கோவின் செயலியில் பிரச்னை ஏற்பட்டது. இதனால்தான் ஒரு சில இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் இந்த சவால்கள் எல்லாம் இருக்கதான் செய்யும். வரும் நாட்களில் இது சரியாகி விடும். அனைத்து மையங்களிலும் தினசரி 100 பேருக்கு தடுப்பூசி அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு சில மையங்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் குறைவாக உள்ளது. வரும் நாட்களில் இது சரி செய்யப்படும். மதியம் வரை 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. மாலைக்குள் 3,500 முதல் 4,500 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>