கோவிட் 19 தடுப்பூசி முகாம் தொடக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. திருவள்ளுர் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது. திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாமை ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் மற்றும் ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது தடுப்பூசி அளிக்கப்பட்டோரிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தனர். இந்த முகாமில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் பி.அரவிந்தன், மாநில கண்காணிப்பு மருத்துவ அலுவலர் சுரேந்திரன், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், துணை இயக்குநர் இளங்கோவன், சுகாதார துறை இணை இயக்குநர் ராணி, துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருத்தணி: திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்புசி வழங்கும் பணியை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசியது: கோவிட் 19 தடுப்பூசி மூன்று கட்டங்களாக போடப்படும். முதல் கட்டமாக நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களில் 574 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும், முதலில் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கும் மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார பணியாளர்களிடம் முன்பதிவு செய்து கொண்டால், அவரது கைப்பேசிக்கு எஸ்.எம் எஸ் வரும். எஸ் எம் எஸ்சில் குறிப்பிட்ட தேதியில் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மாவட்டம் முழுவதும் படிப்படியாக தடுப்பூசி போடப்படும். முகாம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன், திருவள்ளூர் அரசு மருத்துவ மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அரசி ஸ்ரீவத்சன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன், துணைஇயக்குநர் டாக்டர் ஜவஹர், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் ராதிகா உட்பட மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: