அலங்காநல்லூர்சிராவயலில் விறுவிறுப்பு: ஜல்லிக்கட்டில் 2 பேர் பலி: காளைகள் முட்டியதில் 100 பேர் காயம்

அலங்காநல்லூர்: பொங்கல் விழாவை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. இதில் காளைகள் முட்டித்தள்ளியதில் 30 பேர் காயமடைந்தனர். சிராவயலில் நடந்த மஞ்சு விரட்டில் காளைகள் முட்டி 2 பேர் பலியாயினர். மேலும் 70 பேர் காயமடைந்தனர். பொங்கல் திருவிழாவின் 3ம் நாளான நேற்று மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. போட்டியை நேற்று காலை 8.35 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கினர். அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன். ரவீந்திரநாத்குமார் எம்பி மற்றும் ராஜன்செல்லப்பா, மாணிக்கம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏ மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கலெக்டர் அன்பழகன் தலைமையில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வாடிவாசலில் கோயில் காளைகளை தொடர்ந்து, 719 காளைகள் களமிறக்கப்பட்டன.

600 வீரர்கள் பங்கேற்றனர். சிறந்த மாடு பிடி வீரராக 12 காளைகளை பிடித்த மதுரை விராட்டிபத்தை சேர்ந்த கண்ணன்(24) தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முதல்பரிசாக கார் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பரிசை 9 காளைகளை பிடித்த அரிட்டாபட்டியை சேர்ந்த கருப்பண்ணன்(22) வென்றார். இவருக்கு 2 காங்கேயம் கறவை மாடுகள், இரு கன்றுகளுடன் பரிசாக வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை 8 காளைகளை பிடித்த அலங்காநல்லூரைச் சேர்ந்த சக்தி(28) பெற்றார். இவருக்கு ஒரு பவுன் தங்கக்காசு பரிசாக தரப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசு குருவித்துறையைச் சேர்ந்த காளை உரிமையாளர் சந்தோஷ் பெற்றார். இவருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. 2வது பரிசை மேலமடையைச் சேர்ந்த வக்கீல் அருண் காளை பெற்றது. இவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாகத் தரப்பட்டது. மூன்றாவது பரிசை சரந்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த மீசைக்காரனின் காளை பெற்றது. இவருக்கு ஒரு பவுன் தங்கக்காசு பரிசாகத் தரப்பட்டது.

முதல் நிலை பரிசுகளை முதல்வர், துணை முதல்வர் சென்னைக்கு அழைத்து வழங்க இருக்கின்றனர். இரண்டாம், மூன்றாம் நிலை பெற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு களத்திலேயே  பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள் துவங்கி தங்கக்காசுகள் வரையிலும் பலதரப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிராவயலில் 2 பேர் பலி : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே சிராவயலில் நேற்று நடந்த மஞ்சு விரட்டில் சிராவயல் பொட்டல், தென்கரை வயல் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 70 பேர் காயமடைந்தனர். இதில் 12 பேர் மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கள்ளிப்பட்டை சேர்ந்த பெரியகருப்பன் (60), மதகுபட்டி அருகே பெரியஅம்மச்சிப்பட்டியை சேர்ந்த போஸ் (62) ஆகிய இருவரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தடியடியில் ஒருவர் படுகாயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது பதிவு செய்தவை எனக்கூறி 150 காளைகளை சிலர் நுழைக்க முயன்றனர். இதற்கு ஏற்கனவே வரிசையில் நின்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். தடியடியில் தஞ்சாவூரைச் சேர்ந்த காளை உரிமையாளர் பாலபாரதி, தலையில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

நீங்க பேசுங்களேன்... இல்ைல.. நீங்க பேசுறது...

மேடையில் ஜல்லிக்கட்டு  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது வாடிவாசலில் இருந்து கோயில் காளைகளுக்கு முதல்வர், துணை முதல்வர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அப்போது அமைச்சர் உதயகுமார் மண்டியிட்டு கீழே அமர்ந்தார். இதனைக் கண்ட துணை முதல்வர் ஓபிஎஸ் பதறிப்போய், ‘‘எழுந்து நில்லுங்கள்’’ என்று கூறி அவரை நிற்கச் செய்தார். விழா மேடையில் அமைச்சர் உதயகுமார், ‘உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்து பேசுவார்’ என்று அறிவித்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘துணை முதல்வர் பேசியபிறகு நான் பேசுகிறேன்’’ எனக் கூறினார். உடனே துணை முதல்வர், ‘‘இல்லே நீங்களே பேசுங்கள்’’ என்றார். அதற்கு அவர் ‘இல்லை, இல்லை’ என்று கடுமையாக மறுத்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பேசும்படி வலியுறுத்திய நிலையில், வேறு வழியின்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியே எழுந்து மைக்கில் பேசினார். அதன்பிறகு துணை முதல்வர் பேசினார். பொதுவாக அரசு விழாக்களில் முதல்வர் இறுதியாக பேசுவதும், துணை முதல்வர் முன்னதாக பேசுவதும் மரபு. ஆனால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஒருவருக்கொருவர் இறுதியில் பேசுவதற்கான இடத்தைத் தக்க வைக்க நடந்த பனிப்போர் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேவல் சண்டையில் கத்தி பாய்ந்து முதியவர் பலி

பொங்கலையொட்டி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் கடந்த 13ம் தேதி தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சேவல் சண்டை மழை காரணமாக 14ம் தேதி நடைபெறவில்லை. அதற்கு மாற்றாக நேற்று போட்டி நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட சேவல்கள் களம் இறக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தங்கவேல் (60) என்பவரின் சேவலும் இதில் பங்கேற்றது. சேவல் சண்டையில், காலில் கூர்மையான கத்தியுடன்  ஆக்ரோஷமாக வந்த சேவல் எதிர்பாராதவிதமாக தங்கவேலின் தொடையில் பாய்ந்தது. இதில் அவரது  வலது தொடையில் சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி பலமாக குத்தியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரவக்குறிச்சி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

Related Stories:

>