×

மோசமான 7 பாஜ முதல்வர்கள்...5வது இடத்தில் எடப்பாடி பழனிசாமி :கருத்துக் கணிப்பு முடிவில் அதிர்ச்சி

புதுடெல்லி: நாட்டின் சிறந்த முதல்வர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் 2021ம் ஆண்டில் முதல் கருத்துக்கணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19வது இடத்தை பிடித்துள்ளார். ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர்ஸ் இணைந்து ‘நாட்டு மக்களின் மனநிலை’ என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பை நடத்தின. நாடு முழுவதும் 543 தொகுதிகளில் கடந்த 3 மாதமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு, கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், நாட்டின் சிறந்த முதல்வராக ஒடிசாவின் நவீன் பட்நாயக் இடம் பெற்றுள்ளார். கருத்துக் கணிப்பில் பங்கேற்ற ஒடிசாவின் 78.81% மக்கள் பட்நாயக்கின் பணியை பாராட்டி உள்ளனர்.


2வது இடத்தில் 77 சதவீதத்துடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், 66.83 சதவீதத்துடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் இடம் பெற்றுள்ளனர். கேரளா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் மாநில முதல்வர்கள் முறையே 4, 5, 6ம் இடங்களில் உள்ளனர்.

இதில், கடைசி இடமான 23வது ரேங்க்கில் இடம் பெற்று நாட்டின் மிக மோசமாக செயல்படும் முதல்வர் என பெயர் எடுத்திருப்பவர் உத்தரகாண்ட்டின் பாஜ முதல்வர் திரிவேந்திர சிங் ராவத். 0.41% சதவீத மக்களே ராவத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அடுத்த மோசமான முதல்வராக அரியானாவின் பாஜ முதல்வர் மனோகர்லால் கட்டாரும், பஞ்சாப்பின் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்கும் உள்ளனர். மோசமான முதல்வர்கள் வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5வது இடத்திலும், ஒட்டு மொத்த முதல்வர்கள் வரிசையில் 19வது இடத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு 30% மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மோடிக்கு 71% பேர் ஆதரவு
* இன்றைய தேதியில் மக்களவை தேர்தல் நடந்தால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு 58 சதவீதம் பேர் பாஜ கூட்டணி என்றும், 28 சதவீதம் பேர் காங்கிரஸ் கூட்டணி என்றும் கூறி உள்ளனர்.
* ராகுல்-பிரியங்கா இருவரில் யார் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்ற கேள்விக்கு 32 சதவீதம் பேர் ராகுல் என்றும், 35 சதவீதம் பேர் பிரியங்கா என்றும், 37 சதவீதம் பேர் இருவரும் வரக்கூடாது என்றும் கூறி உள்ளனர்.
* ராகுல் காந்தியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு 39 சதவீதம் பேர் நன்றாக இருப்பதாகவும் 44 சதவீதம் பேர் ஏற்கவில்லை என்றும் கூறி உள்ளனர்.
* பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு 71 சதவீதம் பேர் நன்றாக இருப்பதாகவும், 26 சதவீதம் பேர் அதிருப்தி அளிப்பதாகவும் கூறி உள்ளனர்.
* கொரோனா தடுப்பூசி உற்பத்தி விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் பாராட்டும் படியாக இருந்ததாக 51 சதவீதம் பேரும், விரும்பவில்லை என 32 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.

Tags : BJP ,chiefs ,Edappadi Palanisamy: Shock , 7 BJP chiefs shocked by poll results: Edappadi Palanisamy in 19th position
× RELATED பாஜக நிர்வாகிகள் கூட்டம்