பீதியை கிளப்பும் ஒப்புதல் படிவம் கோவாக்சின் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு

புதுடெல்லி: ‘கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும்’ என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள், இந்தியாவில் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து, உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை முதற்கட்டமாக 55 லட்சத்தை மத்திய அரசு வாங்கியுள்ளது.இந்நிலையில், இம்மருந்தை போட்டுக் கொள் பவர்களிடம் நேற்று ஒப்புதல் படிவம் ஒன்றில் கையெழுத்து பெறப்பட்டது. அந்த படிவத்தில், ‘முதல் மற்றும் 2வது மருத்துவ ஆய்வில் கோவாக்சின் மருந்து கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவாக்சினின் மருத்துவ திறன் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.

3ம் கட்ட மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடக்கிறது. எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியமாகும்,’ என கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த படிவத்தில், ‘இந்த தடுப்பூசியால் ஏதேனும் பாதகமான அல்லது கடுமையான பாதகமான விளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு உங்களுக்கு வழங்கப்படும். மோசமான பக்க விளைவுகள் தடுப்பூசியால் தான் ஏற்பட்டுள்ளது என நிரூபிக்கப்பட்டால், அதற்கான இழப்பீடு வழங்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே, கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

3 லட்சம் பேரில் 1.65 லட்சம் பேர் மட்டுமே ஆர்வம்

முதல் நாளான நேற்று பதிவு செய்த 3 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில், மாலை 5.30 மணியுடன் முடிந்த தடுப்பூசி போடும் பணியில், முதல் நாளில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 714 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் வேண்டாம்

டெல்லியில் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் டாக்டர்கள், தங்களின் மருத்துவ கண்காணிப்பாளருக்கு நேற்று எழுதிய கடிதத்தில், ‘முழுமையான மருத்துவ பரிசோதனையை முடித்த கோவிஷீல்டு தடுப்பூசியே வழங்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டால் எங்களில் பெரும்பாலானவர்கள் போட்டுக் கொள்ள மாட்டோம்,’ எனக்கூறி உள்ளனர். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Related Stories: