சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல்: அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்

சென்னை: தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்களுக்கு போட்டியிட இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, கன்னியாகுமரி எம்பி தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் பாஜவுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால் திமுக, அதிமுக கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே மீண்டும் கூட்டணியில் சேர அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்த கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பாஜ, பாமக, தேமுதிக கட்சி தலைமை அதிமுக கூட்டணியில் அதிக சீட்களை பெற பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், 2021ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இந்த கட்சிகள் தயக்கம் காட்டி வருகிறது. அதேநேரம், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று அதிமுக முன்னணி தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இதனால், சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார தொடக்க கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் அதிமுக தலைமை ஏமாற்றம் அடைந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜ தலைவர்கள் தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளை மேற்கோள் காட்டி, இந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மறைமுகமாக டெல்லி தலைமை மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறது. அகில இந்திய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்தபோது, தமிழகத்தில் பாஜவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

தமிழகத்தில் பாஜ வளர்ச்சி அடைவதாக நினைத்து, அதிமுக அதிருப்தி தலைவர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக தமிழக பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் ஒருவர். இவருக்கு பாஜ தலைவர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. அதேபோன்று வேலூர் மாநகராட்சி முன்னாள் அதிமுக மேயர் கார்த்திகாயினி உள்ளிட்டோரும் பாஜவில் இணைந்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இவர்களுக்கு பாஜவில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது என்று அதிமுக மாவட்ட தலைவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசராஜா அல்லது அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் நெல்லை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அதேநேரம் பாஜ சார்பில் நயினார் நாகேந்திரன் முன்னிறுத்தப்பட்டால், அந்த தொகுதி தங்களுக்கு கிடைக்காமல் போகும் என்று கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதனால் அதிமுக - பாஜ இடையே நெல்ைல மாவட்டத்தில் சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: