×

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மீது தமிழ்நாடு, பஞ்சாப் மக்கள் அதிருப்தி: சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் மீது தமிழ்நாடு, பஞ்சாப் மக்கள் அதிருப்தி உள்ளதாக, சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. கடந்த 2020 மார்ச் தொடங்கி தற்போது வரை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையில், மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் ‘சி-வோட்டர்’ நிறுவனம் நடத்தி உள்ளது. நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கி, கிட்டத்திட்ட 30,000க்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் கிட்டத்தட்ட 41.66 சதவீத மக்கள் திருப்தி அடைந்துள்ளனர். ஒடிசாவில், 75.02 சதவீத மக்கள் மத்திய அரசின் செயல்திறனில் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 16.4 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளனர். 8.3 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி அடையவில்லை. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் திருப்தி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் 45.16 சதவீத மக்கள் மத்திய அரசின் செயல்பாட்டால் திருப்தி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் 38.93 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மக்கள் ‘மைனஸ்’ 30.9 சதவீதம் அளவிற்கு அதிருப்தி அடைந்துள்ளனர். அதுவும் பஞ்சாப் மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்திலும் மத்திய அரசுக்கு 40.23 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம் கேரளாவில் 41.08 சதவீத மக்கள் மத்திய அரசின் செயல்திறனில் திருப்தி அடையவில்லை. அரியானாவில் 39.55 சதவீத மக்கள் திருப்தியடையவில்லை. ஜம்மு-காஷ்மீரில், 43.64 சதவீத மக்கள் திருப்தி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 41.66 சதவீதம் பேர் மிகவும் திருப்தியும், 24.67 சதவீதம் பேர் ஓரளவிற்கு திருப்தியும், 29.83 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை’ என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Tamil Nadu ,government ,Punjab , Corona, Federal Government, People, Dissatisfaction, C-Voter
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...