5 மாநில பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை: மாநில அரசுகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

புதுடெல்லி: தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மாநில அரசுகள் முன் அனுமதி பெற வேண்டும் என்று கிடுக்கிபிடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான தேர்தல் அட்டவனை வெளியாக உள்ளது. அதனால், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், பணியாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியில் அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெறவுள்ளதால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அவ்வாறு கூடுதல் வாக்குச் சாவடிகளை அமைக்கும் பட்சத்தில் கூடுதலாக தேர்தல் பணியாளர்களும் தேவைப்படுகின்றனர்.

ஒவ்வொரு துறை அரசு அலுவலங்களிலும் விரும்பம் உள்ள அல்லது விருப்பம் அல்லாத என்று பிரிக்காமல், அனைத்து பணியாளர்கள் பட்டியலையும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. வரும் ஒரு சில வாரங்களில் தேர்தல் பணியில் ஈடுபடப் போகும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குறித்த முழு விபரங்களும் தெரியவரும். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையக் குழு, அமைச்சரவை செயலாளர், தலைமைச் செயலாளர்கள், பணியாளர் துறை செயலாளர் ஆகியோருக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், ‘சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன், தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதலை பெற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறாமல் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால், தேர்தலுக்குப் பிறகு அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாடு முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் பட்டியலில், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (தலைமை நிர்வாக அதிகாரிகள்), கூடுதல், துணை, உதவி தலைமை நிர்வாக அதிகாரிகள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளான சில சம்பவங்களை தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், மாநில அரசுகளால் அவர்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை போன்ற பலன்களையும் பெறமுடியாத நிலை ஏற்படுகிறது. அதனால், நியாயமான தேர்தலை நடத்துவதற்காக அவர்கள் முன் எடுக்கும் முயற்சிகள் பாதிக்கின்றன.

உச்சநீதிமன்ற வழிகாட்டலின்படி தேர்தல் கடமையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முடியாது. அதே நேரத்தில், தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனையை மாநில அரசு புறக்கணிக்க முடியாது. மேலும், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, தலைமை தேர்தல் அதிகாரிகள் (தலைமை நிர்வாக அதிகாரிகள்) மற்றும் பிற அதிகாரிகள் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற ேவண்டும். மேலும், தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தேவையான வசதிகளை (வாகனம், பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள்) போன்றவற்றைக் குறைக்க கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் 5 மாநில தேர்தல் அட்டவணை வெளியாக உள்ளதால், தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கவும், ஏற்கனவே பணியில் இருந்த அதிகாரிகளை அந்த பதவியில் இருந்து விடுவிக்கவும் (இடமாற்றம், துறை ரீதியான நடவடிக்கை) முயற்சிகள் நடக்கின்றன. அதனால், மாநில அரசுகளுக்கு மேற்கண்ட கிடுக்கிபிடி கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>